தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 170 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (11.11.2021) மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.