
மழையில் நெல் மூட்டைகள் நனைவதைத் தடுக்க தமிழ்நாடுஅரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் அண்மைக்காலங்களில் அடுக்கிவைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், அதை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்துவருகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான வசதிகளுடன் மழையில் இருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திகள் வாயிலாக விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர்,“காய வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நெல்கள்தான் மழையில் நனைந்துள்ளது” என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக கூடுதல் விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு,வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்து அடுத்த வாரத்தில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கஉத்தரவிட்டுள்ளது.விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் நெல்லை வீணாக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது.
Follow Us