ADVERTISEMENT

சிக்கித் தவிக்கும் ரயில் பயணிகள்; மத்திய அமைச்சர் ஆய்வு

05:42 PM Dec 19, 2023 | prabukumar@nak…

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள பயணிகளுக்கு உணவு வழங்க மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்ற நிலையில் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டு டன் உணவு, தண்ணீருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றது. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல் மூன்றாவது நாளாகப் பயணிகள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து பயணிகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கித் தவிக்கும் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக ஆய்வு செய்தார். மேலும் தொலைபேசி வாயிலாக அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணியை துரிதப்படுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT