Rain for the next 4 days; Meteorological Department Notification

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 19 ஆம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கு மழைநீர் தேங்கியது. அமைச்சர்கள் நேரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினர். சென்னையைப் பொறுத்தவரை ஜூன் மாதம் என்பது மழை பொழியும் மாதமாக இல்லாத காரணத்தால் இம்மாதத்தில் மொத்தமாகவே 50 முதல் 60 மி.மீ. மழையே சராசரியாகப் பொழிந்துள்ளது. ஆனால் நேற்று தென் சென்னை பகுதிகளில் மட்டும் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

Advertisment

இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisment

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 80 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.