
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பொழிந்து வரும் நிலையில் ஆம்பூரில் சூறைக்காற்றுடன் வீசிய கனமழையின் காரணமாக மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. சேலத்தை அடுத்த தம்பம்பட்டி, நாயக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சேலம் செவ்வாய்பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் இரவில் நீண்ட நேரம் மழை பொழிந்தது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மாதனூர்படுவம்பட்டியில் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் போது மரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சரஸ்வதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கனமழை பொழிந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us