/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/206_19.jpg)
தமிழகத்தில் ஜனவரியின் இறுதியிலும் பிப்ரவரியின் முதல் வாரத்திலும் பெய்த கனமழையின் காரணமாக டெல்டா மற்றும் பிற இதர மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதன்படி, நேற்று அமைச்சர்கள் உயரதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததுகுறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கனமழையால் அறுவடைக்குத்தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாகபேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும். நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
கன மழையால்டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும். பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)