/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2224.jpg)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. அதன்படி திருச்சியிலும், கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இதில், உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்குப் பாலத்தில் அதிகப்படியான வெள்ளநீர் செல்கிறது. தமிழ்நாடு முழுக்க வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்யவும் அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் கே.என். நேரு இன்று (16.11.2021) திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், வயலூர் சாலையில் உள்ள ஆதி நகர் வழியாகச் செல்லும் உய்யக்கொண்டான் ஆற்றில் நீர்செல்லும் அளவினையும், ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தினையும் பார்வையிட்டார். மேலும், ஆற்றின் கரைகளில் உள்ள செடிகளை அகற்றி, தூர்வாரிடவும், உயரம் குறைவாகவும் பழுதடைந்தும் உள்ள ஆற்றின் குறுக்குப் பாலத்திற்குப் பதிலாக புதிதாக உயர்மட்டப் பாலம் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பழனியாண்டி, அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் மு. அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)