
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் முக்கிய பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மே 22ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வண்ணார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குடவாசலில் 6.4 சென்டிமீட்டர் மழையும், வலங்கைமானில் 5.8 சென்டிமீட்டர் மழையும், மன்னார்குடியில் 5.5 சென்டிமீட்டர் மழையும், திருவாரூரில் 5.4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளை என் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.