Skip to main content

ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சஸ்பெண்ட்

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

Railway Signal Control Room Manager suspended

 

மயிலாடுதுறையில் ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே  ஒடிசா மற்றும் ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளுக்கு சிக்னல் கோளாறுகளே காரணம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்று முதலாவது நடைமேடைக்கு மைசூர் விரைவு ரயில் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக நடைமேடை ஒன்றில் நிற்காமல் மைசூர் ரயில் நடைமேடை இரண்டில் வந்து நின்றது .

 

பின்னர் இரண்டாவது நடைமேடையில் நின்ற ரயில் மீண்டும் முதலாவது நடமேடைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சிக்னல் வழிகாட்டல்களை தவறாக கையாண்டதாக மயிலாடுதுறை ரயில் நிலைய சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சுபம்குமார் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிற்கும் நடைமேடையை மாற்றிக் கூறி பயணிகளை அலைக்கழித்த புகாரையடுத்து ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.