Advertisment

எக்ஸ்-கிளாஸ் வகை நீராவி என்ஜினை கொடியசைத்து வழியனுப்பிய இரயில்வே மேலாளர்! (படங்கள்)

திருச்சி தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், முதன்மை தலைமை இயந்திரப் பொறியாளர் ஸ்ரீநிவாஸ், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் மற்றும் இதர முதன்மை தலைமை துறை அதிகாரிகளுடன், திருச்சி பொன்மலை தெற்கு இரயில்வே மத்திய பணிமனையில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர். யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை இரயிலுக்காக, நாட்டிலேயே பொன்மலை பணிமனையில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட எக்ஸ்-கிளாஸ் வகை நீராவி என்ஜினை பொது மேலாளர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மேலும்> டீசல் பணிக்கூடத்தில் பழுது நீக்கி, பராமரிப்பு செய்யப்பட்ட 444வது பொதுத்துறை நிறுவன டீசல் என்ஜினையும், வேகன் கட்டுமானக் கூடத்தில் உருவாக்கப்பட்ட 200வது BVCM வகை கார்டு வேனையும், பழுது நீக்கி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட 123வது LHB பெட்டியையும் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

Advertisment

பணிமனை ஆய்வின்போது பல்வேறு புதிய திட்டப்பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. மறுசீரமைக்கப்பட்ட பாரம்பரிய சதுக்கத்தில், குஜராத் மாநிலத்திலிருந்து பெறப்பட்ட நேரோ கேஜ் இரயில் பெட்டியும், ஒரு புராதான மீட்டர் கேஜ் நீராவி என்ஜினும் காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்த இயலாது என கழிக்கப்பட்ட இரும்பு உதிரி பாகங்களைக்கொண்டு பல்வேறு மாதிரிகளை உருவாக்க, தொழில் பழகுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வாறு இவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வடிவங்களின் காட்சியகமும் திறந்துவைக்கப்பட்டது. மத்திய அரசு இவ்வாண்டை இந்திய சுதந்திரத்தின் பிளாட்டினம் ஜூப்ளி ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் அடையாளமாக புதிதாக உருவாக்கப்பட்ட மியோவாக்கி தோட்டத்தில் பணிமனையின் தொழிலாளர்களால் 500 பீமா வகை மூங்கில் கன்றுகளும், 4000 நாட்டு வகை மரக்கன்றுகளும் நடப்பட்டன. இந்த மியாவாக்கி தோட்டத்தை தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நாட்டுக்கு அர்பணித்தார்.

Advertisment

பொது மேலாளரின் ஆய்வின்போது தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் திறமைகளையும், நிபுணத்துவத்தையும், உற்பத்தியில் மேற்கொள்ளப்படும் செயல்முறை முன்னேற்றங்களையும் வெளிப்படுத்தினர். IOT எனப்படும் இணையதள கண்காணிப்பு முறையில் செயல்படும், திருச்சி - ஹவுரா இடையே இயக்கப்படும் ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் தொழில்நுட்பமும், LHP பவர் கார்-ன் தொழில்நுட்பமும் அதிகாரிகளுக்கு விளக்கி காட்டப்பட்டது. ஐசிஎஃப் இரயில் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் புதிய முறையிலான Epoxy வகை தரைதள அமைப்புகள், ஐசிஎஃப் பெட்டிகளில் கீழ் படுக்கைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரே அளவிலான இணைப்புகள், நீலகிரி மலை ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாலியுரித்தீன் பூச்சுகளுடன் கூடிய GI சீட் பேனல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

பொருட்களை எடுத்துச்செல்ல ஏதுவாக மாற்றியமைக்கப்பட்ட பழைய இரயில் பெட்டிகள், முன்பு கார்களை ஏற்றிச் செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டன. அதிகரித்துவரும் இருசக்கர வாகன உற்பத்திக்கான தேவையைக் கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களைக் கொண்டு செல்ல ஏதுவாக இருசக்கர வாகனங்களை இரண்டு தளங்களில் அடுக்கிக் கொண்டு செல்லும் விதமாக பொன்மலை பணிமனையின் மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து மாற்றியமைத்துள்ளனர். உற்பத்தித் திறனை அதிகரிக்கும் விதத்திலும், வேலைத்திறனை மேம்படுத்தும் விதமாகவும், பல்வேறு அலகுகள் மற்றும் சாதனங்கள் பணிமனையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேகன் கட்டுமானத்திற்கு தேவையான வெல்டிங் செய்வதற்கான இயந்திரமும், துளையிடுவதற்கு மற்றும் ஏற்றிஇறக்குவதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பணிமனையில் உள்ள பவர்ஹவுஸ் பணிக்கூடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரதான மின் இணைப்பு முனையமும் மூலிகைத் தோட்டமும் துவக்கிவைக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக பணிமனையின் மையப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள பொன்மலையில் பணிபுரியும் 4,000 தொழிலாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய ‘பணிமனை குடும்ப மரம்’ என்னும் மையம் திறந்துவைக்கப்பட்டது. ஆய்வின் நிறைவில் தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அதில் கோவிட் - 19 தாக்கத்திற்கு மத்தியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிறப்பாக பணியாற்றிய பணிமனையைச் சேர்ந்த அனைவரது கடின உழைப்பையும் பாராட்டினார்.

Train steam engine trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe