/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rowdy-ni.jpg)
சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் நீதிமன்றத்திற்கு நேற்று (19-12-23) வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை அருகே எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்திஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, பிரேம்குமாரின் உறவினர்களை மீட்டு அருகே உள்ள அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)