ADVERTISEMENT

ஆறு மணி முதலே தொடங்கிய ரெய்டு... மாமனார், தம்பி, தங்கை உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை!

03:25 PM Oct 18, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுவருகிறது. விராலிமலை அருகே இலுப்பூரிலும் சுற்றுவட்டார ஊர்களிலும், அவருடைய மாமனார், தங்கை, தம்பி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் 2016 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 2021 மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22லட்சத்து 56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி. விஜயபாஸ்கர் மீதும், அவருடைய மனைவி ரம்யா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர், அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்திவந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர் கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்திவருகிறார். இவர், பதவிக்காலத்தில் ரூ. 6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி., ரூ. 53 லட்சத்துக்குப் பி.எம்.டபிள்யூ. கார், ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகைகள், காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ. 4 கோடிக்கு விவசாய நிலங்கள், சென்னை தியாகராயர் நகரில் ரூ. 15 கோடிக்கு வீடு, அமைச்சராக இருந்தபோது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது.

அதேபோல், அமைச்சராக இருந்தபோது தனது மனைவி, 2 மகள்கள் மற்றும் அவரது பெயரில் ரூ. 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித்துறை கணக்கின்படி 5 ஆண்டுகளில் சி. விஜயபாஸ்கரின் வருமானம் ரூ. 58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ. 34.5 கோடி செலவு செய்துள்ளார். சி. விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ. 24 கோடி மட்டுமே சேமித்திருக்க முடியும். ஆனால், வருமானத்தை மீறி ரூ. 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT