Advertisment

"நான் நிறைய கற்றுக் கொண்டேன்" - ராகுல்காந்தி பேட்டி

rahul gandhi press meet at madurai

Advertisment

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியைப் பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காண்பதற்காக முதன்முறையாகத் தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ்க் கலாச்சாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விளையாட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க் கலாச்சாரத்தைப் பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்களை நான் பாராட்டுகிறேன். என்றும் தமிழக மக்களுடன் இருப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். தமிழக கலாச்சாரத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

மனிதர்களால் காளைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை. இளைஞர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டது. அது தவறில்லை. இந்த கலாச்சாரம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்க் கலாச்சாரத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முயல்கிறது. தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்கும் நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். தமிழர்களின் உணர்வுகளை எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அழிக்க முடியாது. தமிழகத்தின் கலாச்சாரத்தையும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பற்றி என்னிடம் எடுத்துக் கூறினார்கள். இதன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டம் விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு அல்ல, அவர்களை அழிப்பதற்காகவே. விவசாயிகளையும் விவசாய பொருள்களையும் பிரதமர் அழிப்பதற்குக் காரணம் அவருடைய 3 நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகவே. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு அவர்களை அழிப்பதற்கு மத்திய அரசு குறி வைத்துள்ளது. விவசாயிகளைப் பலவீனப்படுத்த நினைத்துவிட்டால் இந்தியாதான் பலவீனப்படும். மத்திய அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு உதவியாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவிய போது பிரதமர் ஏன் மௌனமாக இருந்தார், ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

jallikattu Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe