இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ராகுல் காந்தி எதற்கும் அஞ்சத்தேவையில்லை, பின்வாங்கத்தேவையில்லை. அவர் ஒரு குறிக்கோளுக்காக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 4,000 கிலோமீட்டர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்திருப்பதன் மூலம் பாஜகவையும், மோடியையும் அவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதெல்லாம் அவர்களுக்கு ஆத்திரத்தைத் தருகிறது.

Advertisment

அவர் ஒரு நல்ல நோக்கத்திற்காக, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்காக, இந்த பிற்போக்கு சக்திகளைபாசிச சக்திகளை எதிர்த்து போரிட்டு வருகிறார். அவருடைய போராட்டம் முன்னோக்கி செல்ல வேண்டும். ஜனநாயக சக்திகள் அவருக்கு துணை இருக்கிறோம். அவருடைய இந்த போராட்டம் வெல்லும்.

கச்சத்தீவு தொடர்ந்து பிரச்சினைக்குரிய பகுதியாக தான் இருந்து வருகிறது. அதில் சிங்களவர்கள் அத்துமீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் நடத்துகின்ற விழாவாக இருந்தாலும், இந்துக்கள் நடத்துகின்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் குளறுபடி செய்வதில் சிங்களவர்கள் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசு இந்துக்களுக்கான அரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டாலும் சிங்களவர்களின் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதே இல்லை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பதில்லை. தற்பொழுது கச்சத்தீவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சிங்களவர்கள் நடந்து கொள்கின்ற போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது'' என்றார்.

Advertisment