Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி எம்.பி. கடிதம்!

Rahul Gandhi MP Letter for CM MK Stalin

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisment

இதற்கிடையே கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

Rahul Gandhi MP Letter for CM MK Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஜூன் 28 ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஜூன் 4. 2024 அன்று நீட் இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

letter neet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe