
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி, தனது நடைபயணத்தின் இடையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்காரர்களை நடைபயணத்தில் சந்தித்து பேசினார்.
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது ஜோதிமணி எம்.பி, மூலம் கருரில் வில்லேஜ் குக்கிங் சேனல்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இயற்கை சூழல் கொண்ட ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக உணவு வகைகளை சமைத்து ராகுல் காந்திக்கு பரிமாறப்பட்டது. இது அப்போது நாடு முழுவதும் பேச்சு பொருளாக சமூக ஊடகங்களில் பரவியது. மேலும் ராகுல் காந்தி அந்த வில்லேஜ் குக்கிங் டீமை வெகுவாக பாராட்டியதோடு தமிழக உணவு வகைகளை தெரிந்து கொண்டதோடு அந்த உணவுகள் மீது அதிக பற்றையும் ஏற்படுத்தியதாக கூறினார்.
இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்து அந்த வில்லேஜ் குக்கிங் டீம், ராகுல் காந்தியை சந்திக்க வந்தனர். நடைபயணத்தில் இருந்த ராகுல்காந்தியிடம் இந்த தகவலை ஜோதிமணி எம்.பி தெரிவிக்கவே உடனே அவர்களை சந்திக்க அனுமதி கொடுத்தார்.
அவர்கள் ராகுல் காந்தியிடம் நடந்து கொண்டே பேசினார்கள். அப்போது ராகுல் காந்தி, “இப்போதும் தமிழக உணவுகள் மீது அதீத பிரியம் உள்ளது. அன்று சாப்பிட்டதையும் இன்று நினைவு கூறுகிறேன். இதே போல் மற்ற மாநிலங்களில் உள்ள உணவு வகைகளை தெரிந்து ருசித்து உண்ணும் விதமாக நீங்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மற்ற மாநிலத்தில் உள்ளவா்களை கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, “கண்டிப்பாக அதை செய்கிறோம். அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வரவேண்டும்” என்றதும், “கண்டிப்பாக வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.