Skip to main content

நீச்சல் மட்டுமல்ல நடனமும் தெரியும்! - பள்ளி நிகழ்ச்சியில் அசத்திய ராகுல்!

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த போது அரசியல் கூட்டங்களில் மட்டுமில்லாமல், சில பள்ளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். அதேபோல் தமிழகத்தில் இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், அங்குள்ள தனியார் பள்ளிக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

 

ராகுல் காந்தியை அப்பள்ளி மாணவர்கள், வழுக்கு மரத்தில் சாகசம் செய்து வரவேற்றனர். அதன்பிறகு ராகுல் காந்தி அப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அக்கிடோவில் கறுப்பு பெல்ட் பெற்றவரான ராகுல் காந்தி, அங்கு ஒரு மாணவருக்கு அக்கிடோவில் கலையைச் செய்து காட்டினார். அதன்பிறகு 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மெரோலின் ஷெனிகாவின் சவாலை ஏற்று, அவரோடு புஷ்-அப் செய்தார். மேலும் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

 

இதனையடுத்து அங்கு பேசிய அவர், இந்தியாவிற்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை எனக் கூறினார். ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு:

 

ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும், அவர்கள் விரும்புவதைக் கேட்காமல் செய்யப்படும் எந்தவொரு கொள்கையும் கல்விக்குப் பயனளிக்கும் கொள்கையாக இருக்கப்போவதில்லை. நீட் பிரச்சினை இங்கே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது நிறைய இளைஞர்களை, தங்கள் கனவுகளை அடைவதிலிருந்து தடுக்கிறது. எனவே அது பயனளிக்காது.

 

பிரதமர் மோடி அவர்களே, இந்தியா வெவ்வேறு கருத்துகள், மொழிகள், மதங்கள் மற்றும் பார்வைகளையும் கொண்டுள்ளது. எல்லா யோசனைகளும் உங்களிடமிருந்து வர வேண்டும் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? இந்திய மக்களை நீங்கள் ஏன் கேட்கவில்லை? மக்கள் விரும்புவதை நீங்கள் ஏன் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை?

 

இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது மற்றொரு விடுதலைப் போராட்டம். ஆனால் அது அகிம்சை மற்றும் பாசத்தோடு இருக்க வேண்டும். இந்தியாவில் கோபமும் பயமும் நிறைய பரவியிருக்கிறது. அதற்கு எதிராகத்தான் நாம் போராடி, மீண்டும் இந்தியாவை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், அச்சமற்றதாகவும், ஒற்றுமையாகவும் மாற்ற வேண்டும். 

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியது. துரதிர்ஷ்டவசமாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா ஆகியவை அந்த மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது. இந்தியாவில் வறுமை மீது இறுதித் தாக்குதலை, 'நியாய்' மூலம் எவ்வாறு செய்வது என்பது குறித்து எங்களுக்கு நல்ல யோசனை உள்ளது. 'நியாய்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும், ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் வறுமையிலிருந்து வெளியேறும் வரை 72,000 ருபாய் வழங்குவதற்கான திட்டதை, நாங்கள் அரசமைத்தால் செயல்படுத்துவோம். இதன்மூலம் 5-6 ஆண்டுகளில், வறுமையை முற்றிலுமாக ஒழிப்போம். இந்தியாவுக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. இந்தியாவின் பிரச்சனை பணம் விநியோகிக்கப்படும் விதம். 'நியாய்' திட்டம் இந்தியாவில் நியாயமற்ற வருமான விநியோகத்தைக் குறைக்கும்

 

நாட்டிலுள்ள பணக்காரர்கள், ஏழ்மையான மக்களை விட மிகக் குறைந்த விகிதத்தில் வங்கிக் கடனைப் பெற முடியும். ஆமாம், ஏழைகளுக்கு நிதி பற்றி புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். ஆனால் அதேசமயம், இந்த அமைப்பு ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

இன்று பள்ளி மாணவர்களுடன் அசத்திய ராகுல், சமீபத்தில் கேரள மீனவர்களுடன் கடலில் இறங்கி நீச்சல் அடித்ததும் வைரலாகியது.