Skip to main content

வானொலி நிலையங்களை மூட முடிவா? - கலை இலக்கிய பெருமன்றம் கண்டனம்

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

Can radio stations be shut down? - Condemnation of the Art Literary Congress

 

மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழ் மொழி பண்பாட்டு வளர் நிலைகளை சிதைத்து சீர்குலைக்கும் செயல்பாடுகளைத் திட்டமிட்டே செய்துவருகிறது. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களை மூடும் முடிவு... இதைக் கண்டித்து மொழி, கலை பண்பாட்டு தளத்தில் முன்னணி அமைப்பாக இயங்கிவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் இரா. காமராசு விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய வானொலி, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகியவற்றுடன் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய நிலையங்களில் இருந்தும் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.

 

பல்வேறு தனியார் பண்பலை வானொலிகளின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் நிலையில், நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அனைவருக்கும் பொதுவான - அதேநேரத்தில் ஒவ்வொரு பகுதிக்குமான பிரத்யேக கலை வடிவங்களையும் அரங்கேற்றும் வகையிலான அரசு ஊடகமான அகில இந்திய வானொலி, படிப்படியாகத் தேய்ந்தே வந்துகொண்டிருக்கிறது.

 

காலத்துக்கேற்ப நிகழ்ச்சிகளை அதிகரித்தும், தரப்படுத்தியும் தர வேண்டும் என்ற இயல்பான கோரிக்கை இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் எழுந்துவரும் நிலையில், இதற்கு நேரெதிராக வானொலி நிலையங்களை ஏறத்தாழ மூடும் முடிவை மத்திய அரசு நிறுவனம் எடுப்பது என்பது வருத்தம் தரும் தகவலாகும்.

 

குறிப்பாக, சென்னை தவிர்த்த இதர வானொலி ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டு, அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து சென்னையிலிருந்தே பெரும்பாலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான சுற்றறிக்கைகள் ஒருபக்கம், வானொலி நிலையத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிவரும் பணியாளர்களை அச்சப்படுத்தியுள்ளது.

 

இந்த முடிவுகளை அகில இந்திய வானொலி நிர்வாகம் - பிரசார் பாரதி நிறுவனம் - கைவிட வேண்டும். தமிழ் ஒலிபரப்புகளை இன்னும் தேவைக்கேற்ப தரப்படுத்தவும், அதிகரிக்கவுமான யோசனைகளை முன்வைக்க தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து, ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது." என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வானொலிகள் மூலம் இந்தியை திணிப்பு'-பாமக ராமதாஸ் கண்டனம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

 'Imposition of Hindi through radio'-Pmk Ramadoss condemned


'காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்' என பாமக நிறுவனர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.-52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி,  நேற்று (அக்டோபர் 2) முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. காலையில் 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

 

காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக வானொலி நிலைய அதிகாரிகள் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளை கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும்.

 

அதுமட்டுமின்றி, இந்தி நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பு என்பதைக் கடந்து இந்தியை திணிப்பது தான். இந்த முயற்சி இப்போது தொடங்கப்பட்டது அல்ல. 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விட்டது. அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் அனுப்பிய கோப்பு எண் 13/20/2014/125 என்ற அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர்,  20.10.2014 அன்று தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

 

சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகியவற்றுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது தான் அப்போது அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால், அதை எதிர்த்து கடந்த 24.10.2014 அன்று நான் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அப்போது திட்டமிடப்பட்டவாறே தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை காரைக்கால் வானொலி ஒலிபரப்பத் தொடங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் தருமபுரி, நாகர்கோவில் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் இத்தகைய  4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகள் திணிக்கப்படக் கூடும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

 

தருமபுரி, நாகர்கோவில், காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ளூர் வானொலிகள் தொடங்கப்பட்டதன் நோக்கமே அப்பகுதிகளில் உள்ள உழவர்களுக்கு வேளாண்மை குறித்த தகவல்களை தெரிவிக்கவும், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன்வளம், வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றை தெரிவிப்பதற்காகத் தான். காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில்  மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை திணிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

 

கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை வழங்குவது தான் பிரசார்பாரதியின் கடமை ஆகும். அதற்கு மாறாக விருப்பமற்ற நிகழ்ச்சிகளையும், மொழிகளையும் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும். இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும். தருமபுரி, நாகர்கோவில்  போன்ற மற்ற நிலையங்களுக்கு இந்தி நிகழ்ச்சிகளை நீட்டிப்பதையும் பிரசார் பாரதி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் காரைக்கால் வானொலி நிலையம் முன், அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

ஒரே நாடு ஒரே வானொலி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முடிவு கண்டிக்கத்தக்கது! மு.தமிமுன்அன்சாரி

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
 Thamimun Ansari

 

 

ஒரே நாடு ஒரே வானொலி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜனவரி 2021 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியின்  அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்தும் நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

 

சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் நிலையங்களிலிருந்து வெளியான தமிழ் சேவை நிறுத்தப்பட்டு, சென்னை நிலையத்தை மையமாக வைத்து ‘ஆகாசவாணி தமிழ்நாடு’ என்ற பெயரில் மட்டுமே நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏனைய நிலையங்கள் மையத்தொகுப்பிற்கு நிகழ்ச்சிகளை மட்டுமே  தயாரித்து வழங்க முடியுமாம். இதே போல் பண்பலை அலைவரிசைகளும் ‘ ஆகாசவாணி தமிழ் ‘ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பப்படவிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுச் சேவை துறைகளை ஒழித்துக்கட்டுவதின் தொடக்கமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. இந்த புதிய ஏற்பாடு  மாவட்ட வட்டாரங்களின் மொழி, பண்பாட்டு , வாழ்வியல் தனித்தன்மைகளை  அழித்துவிட்டு,  ‘ ஒரே நாடு ஒரே வானொலி ‘ என்ற ஒற்றையாக்கத்தில் போய் முடியும் அபாயத்தை எடுத்துக் காட்டுகிறது.

 

இதனால் நிறைய அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் வேலையிழப்பை எதிர்கொள்கிறார்கள். அங்கு பணியாற்றும் பல தமிழ் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 

வட்டார நிலையங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சமூக ஊடகங்கள்,இணைய வழி ஒலிபரப்பை முன்னெடுக்கும்போது ஒலிபரப்புத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முன்னெடுப்பு இயல்பாக தொடங்கி விடும் என குற்றம் சாட்டுகிறோம்.

 

ஆல் இந்தியா ரேடியோ , அகில இந்திய வானொலி என்றே தமிழ் நாட்டில் அறியப்பட்டு வந்த பொது சேவை ஒலிபரப்பின் பெயரை 'ஆகாசவாணி'  என்ற வடமொழியாக்கும் முயற்சியையும் ஏற்க இயலாது. 

 

தமிழகத்து வானொலி நிலையங்கள் ஆல் இந்தியா ரேடியோ என அறிவிப்பதற்கு மாற்றாக ஆகாசவாணி என அறிவிக்க வேண்டும் என்ற உத்திரவை திரும்பப் பெற வேண்டும். அது அகில இந்திய வானொலி சேவை என்றே  குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

வட்டார நிலையங்களை ஒழித்துக்கட்டி, அனைத்தையும் ஒற்றை அலைவரிசையாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  வலியுறுத்துகின்றோம். எனக் கூறியுள்ளார்.