Advertisment

'இந்த முடிவை உடனே கைவிட வேண்டும்; தரத்தை கூட்ட வேண்டும்'-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 Radio frequency should not be covered; Quality must be increased - Anbumani Ramdas insists

அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா வானொலியில் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவுடன் மூடப்பட்டிருக்கிறது. கொல்கத்தா முதன்மை அலைவரிசையில் இதுவரை ஒலிபரப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரெயின்போ பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் என்றும், ரெயின்போ பண்பலைவரிசை இனி செயல்படாது என்றும், அதில் மணிக்கு ஒரு முறை ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் இனி ஒலிபரப்பாகாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலைவரிசையை மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த மாற்றங்கள் மேற்கு வங்க வானொலி நேயர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதைவிட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவை எந்த நேரமும் நிறுத்தப்படக்கூடும்; அதில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்படும்; பண்பலை நிகழ்ச்சிகள் இனி ஒலிபரப்பாகாது என்பது தான்.

Advertisment

சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். தனித்துவமான அதன் நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது. இதுவரை 300 கி.மீ சுற்றளவில் கேட்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.

சென்னை வானொலியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை-ஏ, சென்னை-பி, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிற்றலை ஒலிபரப்பு, ரெயின்போ பண்பலை, கோல்டு பண்பலை ஆகிய 6 அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வந்தன. இவற்றில் சிற்றலை ஒலிபரப்பும், சென்னை-பி அலைவரிசையும் கடந்த இரு ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டன. சென்னை-ஏ அலைவரிசை கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் நாளுடன் மூடப்படவிருந்தது. ஆனால், அப்போதே அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இப்போது சென்னை ஏ அலைவரிசையை மூட மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அவ்வாறு மூடப்பட்டால் நேயர்களுக்கு தரமான நிகழ்ச்சிகள் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், பொறியாளர்கள் என ஏராளமானோர் வேலையிழப்பார்கள். அது தவிர்க்கப்பட வேண்டும்.

பிரசார்பாரதியின் செலவுகளைக் குறைப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது. பிரசார்பாரதியின் தலைமைப் பொறுப்பில் வானொலி, தொலைக்காட்சி குறித்த அனுபவம் இல்லாத இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்படுவது தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். வருவாயை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே எந்த நிறுவனத்தையும் இலாபத்தில் இயக்க முடியுமே தவிர, செலவுகளை குறைப்பதால் அல்ல என்பதை பிரசார்பாரதி நிர்வாகம் உணரவேண்டும். நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும். சென்னை - ஏ அலைவரிசை உள்ளிட்ட அகில இந்திய வானொலியின் எந்த அலைவரிசையையும் மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe