rabid dog bit a school boy

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியைச் சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் ( 7) என்ற பள்ளிச் சிறுவன் திருப்பத்தூர் 12 வது வார்டு ராஜன்தெரு பகுதியில் உள்ள உஸ்மானியா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சிறுவன் அத்திக் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் பள்ளி அருகாமையில் உள்ள கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு மீண்டும் பள்ளிக்கு உள்ளே சென்றபோது வீதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவன் அத்திக்கைக் கடித்துள்ளது.

Advertisment

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisment

அந்த பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாகவும், இதன்காரணமாக அவ்வழியாக செல்லக்கூடிய குழந்தைகளும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனும் பயணித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பள்ளிக்கு சென்ற சிறுவனை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment