Advertisment

கரோனா பயத்தில் மகனைவிட்டு விலகிய பெற்றோர்!!! நோய் இல்லாதவரை மனநோயாளி ஆக்குவதா?

corona

வெளிநாட்டிலிருந்து மிகுந்த சிரமப்பட்டு, சொந்த ஊர் திரும்பிய நபரை ‘தனிமைப்படுத்தல்’ என்ற பெயரில் அவரது குடுமத்தினர் தனித்துவிட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

‘நாம் நோயுடன் போராட வேண்டும்,நோயாளியுடன் அல்ல’ என்பதை மறந்து மக்கள் நோயின் அச்சத்தால் நோயாளியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நோய் இல்லாத ஒருவருடன் போராடுவது அதனினும் கொடுமையான மன நோய்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

Advertisment

முன்பெல்லாம்வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சில ஆண்டுகள் அங்கே தங்கியிருப்பவர்கள்அங்கிருந்து கடிதம் எழுதுவார்கள். அந்த கடிதத்தை காணும் பெற்றோர் உறவினர்கள் முகம் மலர்ந்துபோகும். தங்கள் மகனை உறவினர்களை நேரில் பார்ப்பது போன்று அந்த கடிதத்தை திருப்பி, திருப்பி பார்ப்பார்கள். அதை பிரித்து படிக்கும்போது, அவர்களிடம் நேரடியாக பேசுவது போன்ற உணர்வு ஏற்படும்.

கால மாற்றத்தால் செல்போன்கள் வந்த பிறகு அதன் மூலம் பேசி சந்தோசமடைந்தார்கள். அதன்பிறகு வீடியோ காலில் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தார்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வரும் தகவலைச் சொன்னதும், பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தலைகால் புரியாது. அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வது, கோழி அறுத்து, ஆடு வெட்டி சமைத்து, வயிறுமுட்ட சாப்பிடச் சொல்வது என்று தடபுடலாக வரவேற்பார்கள். உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது அரசாங்க அதிகாரியை, அமைச்சரை வரவேற்பது போன்று வரவேற்று உபசரிப்பார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தாய் தந்தை உறவினர்கள் பாசத்தில் திக்குமுக்காடிப் போவார்கள்.விடுமுறை முடிந்து அவர்கள் மீண்டும் வெளிநாடு போகும்போது பெற்றோர்கள் உற்றார், உறவினர்கள் திரண்டு சென்று மீண்டும் எப்போது வருவாய் என்று கண்ணீர் மல்க வழியனுப்பி வைப்பார்கள். அப்படிப்பட்ட பாசம், நேசம், ஆசை, அன்பு, பண்பு எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. காரணம் - கரோனா.

வழக்கமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பெற்றோரின் பாசத்தில் திக்குமுக்காடிப் போவார்கள். ஆனால் இந்தக் கரோனாவால் பாசம், நேசம், ஆசை, அன்பு, பண்பு போன்றவை எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. காரணம், இந்தக் கரோனா, மக்களை அவ்வளவு பாதித்திருக்கிறது.

கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரின் 25 வயது மகன், துபாய்க்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குதிரும்பிகொண்டிருக்கிறார்கள். இவரும் துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்ப மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

ஒரு வழியாக விமான டிக்கெட் கிடைத்து அங்கேயே அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டு, கரோனா நோய் இல்லை என்று தெரிந்த பிறகுதான் ஊர் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படி பல்வேறு சிக்கல்களில் இருந்து விமானம் மூலம் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து, அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தமது பெற்றோர்கள் ஆசையோடு எதிர்பார்த்துகாத்திருப்பார்கள் என்று எண்ணத்தோடும், பெரும் எதிர்பார்ப்போடும் வந்தவருக்கு பெருத்த ஏமாற்றமும், மன அழுத்தமுமே கிடைத்துள்ளது..

வெளிநாட்டிலிருந்து அவர் வந்த உடனேயே அவரது பெற்றோர், சகோதரிகள், தாத்தா, பாட்டி ஆகியோர் கரோனா அச்சத்தின் காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி விட்டனர். அவர்கள் வீட்டை விட்டு போகும்போது அந்த இளைஞரிடம், 'நீ மட்டும் வீட்டில் இரு,உனக்கு தேவையான சாப்பாட்டைஅனுப்பி வைக்கிறோம். தற்போது கரோனா அச்சம் காரணமாக 15 நாட்கள் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது,எனவே அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போது நாங்கள் அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிக்கொள்கிறோம்', என்று கூறிவிட்டு இளைஞரிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா காலத்தின் தனிமையாலும், உறவுகளிடையே ஏற்பட்ட இடைவெளியாலும் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கரோனா தனிமைப்படுத்தல் என்பதற்கும், அரண்டு ஓடுவதற்கும் இடையிலான வேற்பாட்டைசிலர் புரிந்துகொள்ளவில்லை. அரசு 'நாம் நோயுடன் போராட வேண்டும்; நோயாளியுடன் அல்ல' என்று ஒவ்வொரு அலைபேசி அழைப்பின் முன்னும் விழிப்புணர்வு வழங்குகிறது. ஆனால் அந்தசெய்தி மக்களுக்குசரியாகபோய்சேரவில்லை. மக்கள் நோயே இல்லாத ஒருவருடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்குவிசித்திரமானது.

நோய் பரவல், சிகிச்சை, சிலர் சிகிச்சை பலனின்றி மரணம், தனிமைப்படுத்தல் என்று இந்தகரோனா காலம் சராசரி மனிதர்களை பெற்ற பிள்ளைகளைக்கூட புறக்கணிக்க வைத்து விட்டது. உயிர் பயம் உறவுகளைப் பிரித்துள்ளது.

இந்தபெற்றோர் மேற்கொண்டுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதனை அந்த இளைஞரிடம் பக்குவமாகபேசி எதிர்கொள்ளாமல் அவர் வந்தவுடன் வீட்டைவிட்டு ஓட்டமெடுத்தது, ஏற்கனவே மன ரீதியாக நொந்து ஊர் திரும்பிய அந்த இளைஞரை இன்னும் பாதிப்புக்குள்ளாக்கும். கரோனாவை விடக் கொடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மக்கள் தனிமைப்படுத்தலுக்கும், தனிமையில் விடுவதற்குமான வேறுபாடுகளை உணர்ந்து, அரசு சொல்வதுபோல நோயாளியுடன் போராடுவதைத் தவிர்க்க வேண்டும். நோயே இல்லாதவரிடம் போராடி அவரை மனநோயாளி ஆக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மன நோய்கள் பற்றிய புரிதலையும் அதன் நீண்டகால விளைவுகளையும் தெளிவுபடுத்தி, அரசும் விழிப்புணர்வு வழங்கவேண்டும்.

depression social distancing corona
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe