Skip to main content

இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம்!- அரசு சட்ட பிரிவுகள் மூன்றும் அதிரடியாக ரத்து!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் என அதிரடி தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 


தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மூப்பின் படி 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்தது. ரோஸ்டர் முறையில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015- ஆம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.


இந்நிலையில், அதற்கு மாற்றாக 2016 தமிழக அரசு தமிழக அரசு பணியாளர்கள் பணி விதிகள் சட்டத்தை கொண்டு வந்து, Tamilnadu government servants (conditions of service) act 2016, மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்கி வந்தது. தமிழக அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமான உத்தரவு. 

quota Promotion of reservation, grant of work elder is illegal chennai high court


எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டீக்காரமன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘விதிகளுக்குப் புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையை நீதிமன்றம் ஏற்று கொள்ள முடியாது எனக் கூறி தமிழக அரசின் இந்தச் சட்டவிதிகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என தீர்ப்பளித்தனர்.

தமிழக அரசு கையாண்ட இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாகக் கருதப்படும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அது தன்னிச்சையானது, எனவே, அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாகத் தயாரிக்க வேண்டும்  என  உத்தரவிட்டுள்ளனர்.

இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் எனவும், இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி மூப்பு வழங்கிட வகை செய்யும் (Tamilnadu government servants (conditions of service) act 2016 -ல் உள்ள 3 சட்ட பிரிவுகள் 1, 40, 70 ஆகிய மூன்றையும் ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும், பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.