
“எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணத்தோடு வந்தேன்” என்று நாகூருக்கு வந்திருந்த சசிகலா தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா, அரசியலில் மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்குவார் என பலதரப்பட்டவர்களும் எதிர்ப்பார்த்திருந்தனர். இந்தநிலையில், திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார் சசிகலா.
அதன்படி நேற்று நாகூர் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். சொகுசு காரில் நாகூர் நாகநாத சுவாமி ஆலயம் வந்தடைந்த அவரை அமமுகவின் நாகை மாவட்டச் செயலாளரும், நாகை சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.
தொடர்ந்து கோயிலின் ராகு சன்னதியில் ராகு தோஷம் (நாக தோசம்) நீங்க பூஜை ஹோமங்களை செய்து சசிகலா வழிபட்டார். பசுபதி குருக்கள், மணிகண்டன் குருக்கள் ஆகியோரின் சிறப்பு ஹோமத்தில் பங்கேற்ற சசிகலா, நாகநாத சுவாமி, திருநாகவல்லி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்தவரை செய்தியாளர் சூழ்ந்தனர்.

அப்போது, “வேண்டுதல் காரணமாக தரிசனம் செய்ய நாகூர் நாகநாத சுவாமி ஆலயம் வந்தேன். எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணத்தோடு வந்தேன்" என்றார். மேலும் அவரிடம், “சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?” எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் மௌனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.