Skip to main content

பாழடைந்த கிணற்றில் மழைநீர் சேகரித்து குடிதண்ணீருக்கும், மரம் வளர்க்கவும் பயன்படுத்தும் விவசாயி

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

    தமிழ்நாட்டில் காட்டாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிய காலத்தில் ஏரி குளங்கள் நிரம்பி கிணற்றில் தண்ணீர் இறைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மழை அளவு குறைந்ததுடன் காட்டாறுகள், ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்கள் அத்தனையும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டும் தடைபட்டும் போனதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கிணற்றுப்பாசம் கேள்விக்குறியானது.

 

v

 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க பல விவசாயிகள் இணைந்து 300 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்தார்கள். காலப்போக்கில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்தார்கள். ஆனால் மேலும் நிலத்தடி நீர் குறைந்த நிலையில் சுமார் 300 அடி ஆழத்தில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக 500 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தார்கள். இந்தநிலையும் கானநீரானதால் கடந்த 3 ஆண்டுகளாக ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாவில் மறமடக்கி, அரயப்பட்டி, கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு போன்ற பல கிராமங்களில் சுமார் 1100 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து சுடுதண்ணீரை எடுத்தனர். ஆனால் இந்த ஆண்டு 1100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

    இந்த நிலையில் தான் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்வதால் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிதண்ணீருக்கும் பிரச்சணை ஏற்படுவதைக் கண்ட தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராம இளைஞர்கள். கடந்த ஆண்டு குளங்களை தூர்வாரி 8.5. கிமீ தூரத்திற்கு வரத்து வாய்க்கால்களை சீரமைத்தனர். தொடர்ந்து கல்லனை தண்ணீரைக் கொண்டு அனைத்து குளம், குட்டைகளை தண்ணீரை நிரைத்தார்கள். அதன் பலனாக நிலத்தடி நீர்மட்டம் வேகமக உயர்ந்து 10 அடிக்கு வந்தது. தற்போது நிலவும் கடும் வறட்சியிலும் கூட சுமார் 60 அடிக்குள் நிலத்தடி நீர் மட்டம் உள்ளதால் அந்த கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் பாசனத்தை நிறுத்திய ஆழ்குழாய் கிணற்று பாசன விவசாயிகளும் மீண்டும் மோட்டாரை இயக்கத் தொடங்கி விவசாயம் செய்ய தொடங்கிவிட்டனர். 

 

இதைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம இளைஞர்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு குளம், குட்டை, வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

v

  

 கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் மூலம் 23 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குளம் தூர்வாரும் பணிகள் தொய்வில்லாமல் நடந்து வருகிறது. இளைஞர்களின் இந்த முயற்சியை பார்த்து 100 வேலையில் குளம் வெட்டி சேமித்த ரூ. 10 ஆயிரத்தை ராஜம்மாள் என்ற மூதாட்டி குளம் வெட்ட கொடுத்தார். அதன் பிறகு கொத்தமங்கலம் மட்டுமின்றி பல கிராம இளைஞர்களும் கொத்தமங்கலத்தில் நீர்நிலை பாதுகாப்புக்காக நிதியாக வழங்கி வருகின்றனர். நிதி மட்டுமின்றி உணவு மற்றும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து மற்ற பல கிராமங்களிலும் குளம், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை இளைஞர்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.


    
இது ஒரு புறமிருக்க அதே கொத்தமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் விவசாயி வீரமணி (வயது 36). கடந்த 6 மாதமாக தன் வீட்டின் கூரையில் விழும் ஒரு துளி மழைத்தண்ணீரைக் கூட தொட்டியில் சேமித்து குடிக்கவும், மரங்களுக்கும் பயன்படுத்தி வருகிறார். அதாவது வீட்டின் பின்புறம் இருந்த பழைய கல் கட்டப்பட்ட கிணற்றை பாதுகாப்புக்காக மண்ணை போட்டு மூடினார். பிறகு அவருக்குள் உதித்த யோசனையில் மீண்டும் கல் கட்டப்பட்ட அளவு வரை அந்த கிணற்றை தோண்டி அடியில் சிமென்ட் தளம் அமைத்து மேலே மூடிகள் அமைத்தவர் பிறகு தனது வீட்டின் கூரையில் பிளாஸ்டிக் குழாய்களை அமைத்து மழைத் தண்ணீர் அந்த குழாய்கள் மூலம் ஒன்றாக ஒரே குழாயில் சென்று மழைநீர் சேமிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இறங்குகிறது. மழைத் தண்ணீருடன் இலைகள் போன்ற தூசிகள் தொட்டிக்குள் செல்லாமல் இருக்க 3 இடங்களில் சல்லடை அமைத்து தண்ணீரை சுத்திகரித்த பிறகே தொட்டிக்குள் தண்ணீர் செல்கிறது. அந்த தண்ணீர் சுத்தமாக இருப்பதால் மோட்டார் வைத்து தேவைக்கு ஏற்ப குடிக்கவும், குளிக்க மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்வதுடன் அருகில் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள எழுமிச்சை மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பழம் பறித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மழை நீரை சேமித்து சிக்கனமாக செலவிட்டு வருகிறார்.

 

    இது குறித்து விவசாயி வீரமணி கூறும் போது.. எனது தோட்டத்தில் இருந்த 400 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்தது. அதன் பிறகு எங்கள் வீட்டிற்கே குடிக்க, குளிக்க, கால்நடைக்கு என்று தண்ணீருக்காக பல இடங்களுக்கும் அலைந்தோம். இந்த நேரத்தில் தான் பழைய கல் கட்டப்பட்ட கிணற்றை மண்ணை கொட்டி மூடியிருப்பதை மீண்டும் தோண்டி மழைத் தண்ணீரை சேமிக்கலாம் என்று திட்டமிட்டு மூடிய கிணற்றை 15 அடி ஆழம் வரை மீண்டும் தோண்டினேன். அப்போது மூடிய கிணற்றை தோண்டி எப்படி மறுபடி தண்ணீர் கொண்டு வர முடியும் என்று பலர் ஏலனம் செய்தார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. 15 அடி ஆழத்தில் கல் கட்டுமானம் முடிந்தது. அந்த மட்டத்தில் சிமென்ட தளம் அமைத்தேன். பிறகு கிணற்றின் மேலே முழுமையாக மூடி அமைத்த பிறகு வீட்டின் ஓடுகளில் விழும் மழைத் தண்ணீரை கொண்டு வந்து கிணற்றில் விட குழாய்கள் அமைத்து தூசிகள், இலைகள் போகாமல் 3 இடங்களில் சல்லடை அமைத்து தண்ணீரை வடிகட்டி தொட்டிக்குள் செல்ல வழி செய்தேன்.

 

கஜா புயலுக்கு முன்பு இந்த பணிகள் முடிந்தது அதன் பிறகு புயலின் போது நல்ல மழை பெய்ததால் மழை நீரால் தொட்டி நிரம்பியது. அந்த நேரத்தில் மின்சாரம் இல்லை, விவசாய ஆழ்குழாய் கிணறுகளும் இயங்கவில்லை. அதனால் மக்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். ஆனால் என் வீட்டில் சேகரிக்கப்பட்ட மழை நீர் எனக்கு மட்டுமின்றி சுற்றியுள்ள 30 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு மேல் கை கொடுத்தது. குடிக்க, சமைக்க, குளிக்க, கால்நடைகளுக்கு எல்லாம் இந்த தண்ணீர் தான் எடுத்தோம். 3 மாதங்கள் வரை புயலில் சேமித்த தண்ணீர் இருந்தது. அதன் பிறகும் மழை இல்லை அதனால் டேங்கரில் தண்ணீர் வாங்கி மழை நீர் சேமிப்பு தொட்டியில் நிரப்பி வைத்துக் கொண்டேன் அடுத்த 3 மாதம் வரை எங்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தியடைந்தது.

 

வாரத்தில் ஒரு நாள் நான் வளர்க்கும் எழுமிச்சை மரக் கன்றுகளுக்கும் இந்த தண்ணீரை பாய்ச்சிக் கொள்வேன். திங்கள் கிழமை தான் புயலுக்கு பிறகு சிறிது நேரம் தூறல் விழுந்தது. அந்த தண்ணீர் கூட சுமார் 250 லிட்டர் வரை தொட்டிக்கு சென்றுவிட்டது. அதாவது வீட்டுக் கூரையில் விழும் ஒரு துளி மழை தண்ணீரும் என் வீட்டு சேகரிப்பு தொட்டிக்கு செல்லும் என்றார்.   மேலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீட்டிலும், அரசு பள்ளிகளின் வளாகங்களிலும் இது போன்ற கல் கட்டப்பட்ட கிணறுகள் இருக்கும் அவற்றை மூடிவிடாமல் மழை நீரை சேமித்து பயன்படுத்தலாம் என்றார்.  

 

இவரது நல்ல பணியை பாராட்டுவது நமது கடமை அடுத்தவர்களும் இந்த செயலை செய்தால் மழைத்தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தினார் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கலாம் நிலத்தடி நீரையும் சேமிக்கலாம் அரசாங்கம் வெட்டிய ஆயிரம் ஆயிரம் கிணறுகள் பாழடைந்து தண்ணீர் இன்றி விஷ வாயு உற்பத்தியாகி ஆபத்தான நிலையில் கிடக்கிறது. அந்த கிணறுகளில் அரசாங்கமே நிலத்தடி நீரை சேமிக்க மழைத் தண்ணீரை பயன்படுத்தலாம்.

சார்ந்த செய்திகள்