Puthukottai Vadakadu village moi virunthu

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வேம்பங்குடி - பைங்கால், மேற்பனக்காடு, நெடுவாசல், அணவயல், மாங்காடு, வடகாடு என ஆலங்குடி வரை சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களிலும், தஞ்சாவூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, திருச்சிற்றம்பலம், களத்தூர் உட்பட சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் ஒரு கலாச்சார விழா ‘மொய் விருந்து’.

விவசாயம் செழித்திருந்த போது மொய் விருந்துகளிலும் கோடிக்கணக்கில் வசூல் கொட்டியது. இதனால் சிறு வணிகம் முதல் பெரு வர்த்தகம் வரை அனைத்தும்அதிகமாகவே இருந்தது. விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு, விவசாயத்திற்கு தேவையான ஆழ்குழாய்க் கிணறுகள், தொழில் நிறுவனங்கள் என செழிப்பாகவே காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி மாதங்களில் கிராமங்கள் மொய் விருந்துகளால் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். தடபுடலான ஆட்டுக்கறி விருந்து கொடுத்து லட்சங்களில் தொடங்கி பல கோடிகள் வரை பணம் வசூல் செய்த மகிழ்ச்சியான காலங்களை கஜா புயலும், தொடர்ந்து வந்த கொரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. வாங்கிய மொய்யைக் கூட திருப்பிச் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள். சில ஆண்டுகளாக மொய் வசூல் பாதிக்கும் மேல் குறைந்து தற்போது முற்றிலும் குறைந்து வருவதால் வர்த்தகம், வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது.

Puthukottai Vadakadu village moi virunthu

Advertisment

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மொய் விருந்து நடத்தியவர் பல லட்சம் ரூபாய் மொய் தேங்கியதால் அதனை வசூல் செய்ய தேநீர் மொய் விருந்து நடத்தி இருக்கிறார். இதற்காக மொய் பாக்கி உள்ளவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அச்சடித்து தனக்கு வரவேண்டிய மொய் பாக்கியைக் குறிப்பிட்டு அழைப்பிதழ் கொடுத்து தேநீர் விருந்து நடத்தி உள்ளார்.

இது குறித்து தேநீர் மொய் விருந்து நடத்திய வடகாடு கனகராஜ் கூறும் போது “நான் கடந்த 1998 ம் ஆண்டு முதல் மொய் விருந்து நடத்தி வருகிறேன். 1998 ல் எனது முதல் மொய் விருந்தில் ரூ.1 லட்சம் மொய் வாங்கினேன். அதனைத்தொழிலில் முதலீடாக்கி அதில் கிடைத்த வருமானத்தில் திரும்ப மொய் செய்து 2003 ல் ரூ.3.75 லட்சமும், 2008 ல் ரூ.17 லட்சமும் மொய் வாங்கினேன். 2013 ல் ரூ.1.73 கோடியும், 2018 ல் ரூ.3.18 கோடியும் மொய் வாங்கினேன். அதன் பிறகு கஜா புயல் வந்து மொத்த விவசாயத்தையும் அழித்துவிட்டது. அதிலிருந்து கொஞ்சம் மீண்டு எழும் போது கொரோனா வந்தது. சில ஆண்டுகள் விவசாயிகளை முற்றிலும் முடக்கிவிட்டதால் விவசாயம், தொழில், வர்த்தகம் அனைத்தும் முடங்கியதால் மொய் விருந்துகளும் முடங்கிப் போனது.

2018 ல் ரூ.3.18 கோடி மொய் வாங்கிய நான் ரூ.1.6 கோடி புது மொய் செய்துவிட்டு 2022 ல் மொய் விருந்து செய்த போது ரூ.80 லட்சம் மட்டுமே மொய் வந்தது. அதில் ரூ.29 லட்சம் வரை மொய் வராமல் பாக்கி நின்றது. விவசாயம் சரியில்லை, தேங்காய், மாங்காய், வாழை விற்பனையும் சரியில்லை என்பதால் விவசாயிகளால் மொய் செய்ய முடியாத நிலையில் உள்ளதை என்னால் உணர முடிந்தது. இதனால் மொய் விருந்துகளைச் செய்து வளர்ந்த கிராமங்கள், தொழிலிலும் முடங்கிப் போனது. இருந்தும் எனக்கு பணத் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், தேநீர் மொய் விருந்து என அழைப்பிதழ் அச்சடித்து எனக்கு மொய் தர வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்து வெள்ளிக்கிழமை தேநீர் மொய் விருந்து நடத்தினேன். ஓரளவு மொய் வசூல் ஆகி உள்ளது. இன்னும் நிறைய பாக்கி உள்ளது.

Advertisment

இனிமேல் விவசாயம் செழித்து விளை பொருட்கள் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும் போதுதான் அதனைச் சார்ந்துள்ள மொய் விருந்துகளும், தொழில் வர்த்தகமும் செழிக்கும். அதுவரை மொய் விருந்துகள் குறைந்து கொண்டுதான் போகும்” என்று களநிலவரத்தை விரிவாகக் கூறினார். இதே போல அணவயல் உட்பட பல இடங்களிலும் தேநீர் விருந்துகள் நடத்தப்பட்டுள்ளது.