Advertisment

கதறி அழுத பெற்றோர்கள்... காலில் விழுந்து மன்னிப்பு கோரிய ஆசிரியை! 

Puthukottai school students passed away issue school reopen

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் இந்த பள்ளியில் படித்து இலுப்பூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்து கடந்த புதன் கிழமை திருச்சி மாவட்டம், தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு பயிற்சியாளரான ஆசிரியர் இப்ராகிம், பட்டதாரி ஆசிரியை திலகவதி ஆகியோர் 15 மாணவிகளை அழைத்துச் சென்றனர்.

போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் காவிரி ஆற்றை பார்க்க வேண்டும் என்றதால் ஆசிரியர் இப்ராகிம் கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆசிரியை திலகவதி அவர்களுடன் செல்லவில்லை. ஆற்றங்கரையோரம் மாணவிகளை நிறுத்திவிட்டு ஆசிரியர் ஆழம் பார்க்கச் சென்ற சிறிது நேரத்தில் மாணவிகள் 8 பேர் அடுத்தடுத்து ஆற்றுக்குள் இறங்கிய போது மண் சரிவு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் சோபியா என்ற மாணவி, தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவிகள் 3 பேரை துணிச்சலாக வெளியே தூக்கி விடும் போது கரையோரமாக நின்ற கோகிலாவும், பவினாவும் கரையேற்றி காப்பாற்றினார்கள். தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த மாணவி லாவண்யா, அக்கா என்னை காப்பாத்து என்று கதற லாவண்யாவை தூக்கிய சோபியாவையும் சேர்த்து தண்ணீர் உள்ளே இழுத்துக் கொண்டது. 3 மாணவிகளை காப்பாற்றிய சோபியாவும் மூழ்கிப் போனார். இந்த சம்பவத்தில் கால்பந்து வீராங்கனைகளான இனியா, லாவண்யா, சோபியா, தமிழரசி என 4 மாணவிகளின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் பிலிப்பட்டி கிராமத்திற்கு தெரிந்த போது கிராமமே பள்ளி வளாகத்தில் கூடி கதறி அழுதனர். பலர் மயக்கமடைந்து விழுந்தனர். உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனை செல்லும் முன்பே வீராங்கனைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டிருந்தது. குழந்தைகளின் முகத்தைக் கூட காட்டாமல் பொட்டலம் கட்டிட்டாங்க என்று உறவினர்கள் முற்றுகையிட்டு மறியல் செய்ய, இந்த தகவல் அறிந்து இலுப்பூரில் இருந்த உறவினர்கள் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் சமாதானம் செய்து உடல்களை பெற்று கொடுத்து இரவிலேயே அடக்கம் செய்தனர்.

Advertisment

பள்ளி தலைமை ஆசிரியை பொட்டுமணி, பட்டதாரி ஆசிரியை திலகவதி, இடைநிலை ஆசிரியர் இப்ராகிம் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆசிரியர் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ரகுபதி, ஜோதிமணி எம்.பி, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.2 லட்சம் வழங்கினார்கள்.

அமைச்சர் மெய்யநாதன், விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மாணவிகள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி நிவாரணம் வழங்கினார்கள். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கேட்டு கோரிக்கை வைத்த போது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். 4 வீராங்கனைகளை இழந்த கிராமமே சோகத்தில் மூழ்கியதால் தொடர்ந்த 2 நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் பிரேயர் நடந்தது.

பள்ளி திறக்கப்படும் தகவல் அறிந்து குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கதறி அழுதனர். இதில் மாணவி தமிழரசியின் பெற்றோர் குழந்தைகள் இறந்து சில நாள் கூட ஆகல, பிரேதப் பரிசோதனைஅறிக்கை கூட வரல அதற்குள் பள்ளி திறப்பா? எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்கள். அதிகாரிகள் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். ஒரு ஆசிரியை பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார். பள்ளி வளாகத்தில் உருக்கமான சம்பவங்கள் நடந்தது.

ஆசிரியர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோர்களின் கோரிக்கையையடுத்து புதன் கிழமைக்குள் வீராங்கனைகளின் பிரேதப் பரிசோதனைஅறிக்கை பெற்றுத் தரப்படும். அரசு வேலை சம்பந்தமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தலைமை ஆசிரியர் பொட்டுமணி வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். உடனடியா காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக3 ஆசிரியர்கள் தற்காலிக பணியில் நியமனம் செய்யப்படுகின்றனர் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பிறகு பள்ளி வகுப்புகள் தொடங்கியது.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe