
“தாய்மாமன் குதிரையில வந்து உன் புள்ளைகளுக்கு காது குத்துவாங்களோ...” என்று கேட்கும் உறவுகளிடம், “எங்க கூடப் பொறந்த பொறப்புக யானையிலயே வருவாக பாருங்க...” என்று சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை சகோதரிகளுக்கு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரே மெச்சும் அளவுக்கு அப்படி ஒரு தாய்மாமன் சீர் நிகழ்வு மாங்காடு கிராமத்தில் நடந்துள்ளது. பொறியாளர் இளையராஜா - நவநீதா தம்பதியின் குழந்தைகளான ரக்சனா, சுதிக்சன் ஆகியோர் காதணி விழா, மாங்காடு மாரியம்மன் கோயிலில் பலபேரின் மொய் விருந்தோடு நடந்தது.
காதணி விழாவிற்கு மேடையில் அமர்ந்தனர் காதணிச் செல்வங்கள். அப்போது, ‘நேரம் ஆகுது தாய்மாமன்கள் இன்னும் வரலயே’ என்ற குரல் கேட்க.. ‘இதோ வந்துட்டாங்க’ என்று மற்றொரு குரல் பதில் சொல்ல, வெளியே செண்டை மேளம் முழங்க ஆட்டுக்கிடாய், உள்ளூரில் விளைந்த முக்கனிகளான மா, பலா, வாழையோடு, உள்ளூரில் கிடைக்கும் அத்தனை பழங்கள், இனிப்புகள், எவர்சில்வர், வெண்கல பாத்திரங்கள், பழமையை மறக்காமல் தகரப் பெட்டி, பீரோ, சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள், காயும் பழமும் காய்த்து தொங்கிய சப்போட்டா மரங்கள் (பெரிய கன்றுகள்) இத்தனையும் ஏற்றிக் கொண்டு 12 மாட்டு வண்டிகள் அணிவகுத்து வந்தது தான் அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மாட்டு வண்டிகளில் தாய் மாமன் சீரா என்ற பலரது கேள்விக்கும் சிம்பிளாக பதில் சொன்னார் தாய்மாமன்.. “எங்க அப்பா 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் மாட்டு வண்டி ஓட்டி குப்பை அள்ளி தான் எங்களுக்கு சாப்பாடு போட்டு படிக்க வச்சு ஆளாக்கினார். அந்த கஷ்டத்தை நினைத்து தான் நாங்க இன்றைக்கு நல்லா இருக்கிறோம். எங்களை வளர்த்த மாட்டு வண்டியை மறக்க முடியுமா? அதனால தான் எங்க தங்கச்சி குழந்தைங்களுக்கு காதுகுத்த மாட்டு வண்டிகள்ல வந்தோம். இன்றைக்கு மோட்டார் வாகனங்கள் நிறைய வந்துட்டாலும் நம்ம பாரம்பரியம் மாட்டு வண்டி பயணம் தானே., அதனால தான் மாட்டு வண்டியில வந்து நாங்க வண்டிக்காரர் பிள்ளைங்க என்பதை எல்லாருக்கும் ஞாபகப்படுத்தினோம். எந்த குறையும் இல்லாம சீர் செய்ய நினைச்சோம் அதான் டிரங்க் பெட்டி வரை வாங்கி வச்சிட்டோம்” என்றார்.
சீரோடும் சிறப்போடும் நடந்து முடிந்தது காதணி விழா. வந்தவர்கள் அனைவருக்கும் ஆட்டுக்கறியோடு காதணி மொய் விருந்து பலமாக இருந்தது.