Skip to main content

துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சிறுவன்; அமைச்சர்கள் அஞ்சலி! 

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த 30ஆம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் போலீசாரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

 

துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்து வெளியேறிய ஒரு துப்பாக்கி குண்டு நார்த்தாமலை கிராமத்தைச் சேர்ந்த முத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரது பேரன் கொத்தமங்கலபட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி என்னும் 11 வயது சிறுவன் தலையை துளைத்தது. தொடர்ந்து சிறுவனுக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  

 

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுவன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னத்துரை, சிறுவனது குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும்.  வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

 

சிறுவன் இறந்த தகவல் அறிந்து உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களிடம் போலீசாரும் அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர். 

 

இன்று சிறுவன் புகழேந்தி உடல் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடல் நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் உறவினர்கள் கதறிக் கொண்டு அங்கே சென்றனர். அங்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து தமிழக அரசு நிவாரணம் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்