Skip to main content

குளம் வெட்டி சேமித்த பணத்தை குளம் வெட்ட கொடுத்த மூதாட்டி 

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்குறைந்து ஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. அதனால் விவசாயம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் குடிதண்ணீர் பிரச்சனையும் எற்படத் தொடங்கிவிட்டது. பல கிராமங்களில் குடிதண்ணீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. விவசாயிகள் பல லட்சம் செலவு செய்து அமைத்த ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

r


இந்த நிலையில் தான் நிலத்தடி நீரை சேமிக்க கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் மழைத் தண்ணீரை தேக்க அனைத்து நீர்நிலைகளையும் இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தின் சார்பில் கடந்த மாதம் 12 ந் தேதி குளம், குட்டை, வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது. சில இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் பணியை தொடங்கி சில நாட்களில் தடுமாற்றத்துடன் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜம்மாள் (64) என்ற மூதாட்டி 100 நாள் வேலை செய்து தனது பேரக்குழந்தைகளுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை குளம் சீரமைப்பு பணிக்காக பணி நடக்கும் இடத்திற்கே வந்து கொடுத்தார். இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் படத்துடன் வெளிவந்தது. அதன் பிறகு பலரும் அந்த மூதாட்டியை பாராட்டினார்கள்.


    இந்த நிலையில் மூதாட்டியின் செயலை வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் போனில் பாராட்டியவர்கள் கொத்தமங்கலம் கிராமத்திற்கு நேரில் வந்து கிராமத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருந்தனர். 


    இந்த நிலையில் தான் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் ராஜம்மாள் பெயருக்கு ரூ. 500 மணியார்டரில் அனுப்பி தங்கள் சேவையை பாராட்டுவதுடன் உங்கள் கையால் குளம் சீரமைக்க இந்த நிதியை கொடுங்கள் என்று அனுப்பி இருந்தார். அந்த பணத்தை இன்று குளம் சீரமைப்புக்குழுவிடம் ராஜம்மாள் ஒப்படைத்தார். மேலும் ராஜம்மாள் கூறும் போது.. நான் சேமித்த பணத்தை எங்கள் ஊர் நலனுக்காக கொடுத்தேன். அந்த செய்தியை பார்த்துவிட்டு நிறைய பேர் போன் செய்து பாராட்டினார்கள். மேலும் எங்கள் ஊருக்கு வந்து பார்த்து உதவிகள் செய்வதாகவும் சொன்னார்கள். இப்ப யாரோ முகம் தெரியாத ஒருவர் எங்கள் கிராமத்தில் தண்ணீரை சேமிக்க எனக்கு பணம் அனுப்பி இருந்தார். அந்த பணத்தை இளைஞர்களிடம் கொடுத்துவிட்டேன் என்றார்.


    இது குறித்து இளைஞர் மன்றத்தினர் கூறும் போது.. முதலில் பணியை தொடங்கினோம் சில நாட்களில் கையில் இருந்த பணம் முடிந்துவிட்டது. அந்த நேரத்தில் ராஜம்மாள் பாட்டி ரூ. 10 ஆயிரம் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினார். அதைப் பார்த்துவிட்டு கொத்தமங்கலத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி பல ஊர்களில் இருந்தும் நிதி வழங்கி எங்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 30 நாட்களாக தொடர்ந்து எங்கள் பணிகள் நடக்கிறது. பல குளங்கள் சீரமைப்பு முடிந்துவிட்டாலும் இன்னும் பல குளம், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களை உற்சாகப்படுத்திய ராஜம்மாள் பாட்டிக்கும் நிதி மற்றும் உணவு, மற்ற பல உதவிகள் செய்து வரும் அனைவருக்கும்  நன்றி சொல்லனும் என்றனர். 
            
 

சார்ந்த செய்திகள்