Advertisment

நிலத்தடி நீரை பாதுகாக்க.. 100 வேலை பார்த்து சேமித்த பணம் 10 ஆயிரத்தை  தூர் வார இளைஞர்களிடம் வழங்கிய மூதாட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. ஆலங்குடி தொகுதியில் கொத்தமங்கலம், குளமங்கலம், மறமடக்கி, அரயப்பட்டி, கூழையன்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் ஆழத்திற்கு சென்றுவிட்டது. குடிதண்ணீருக்கு கூட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் ரூ. 15 லட்சம் வரை செலவு சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை.

Advertisment

r

இந்த நிலையில் தான் கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக இளைஞர்கள் சொந்த செலவில் அம்புலி ஆற்றில் தடுப்புகளை ஏற்படுத்தி அருகில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வரத்து வாய்க்கால்களை சீரமைத்தனர். அதே போல கீரமங்கலம் தெற்கு பகுதியிலும் இளைஞர்கள் முயற்சியால் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே போல கொத்தமங்கலம் பகுதியிலும் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் தான் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை என்பதால் கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து அம்புலி ஆற்றில் காமராஜரால் கட்டப்பட்டு தற்போது பராமரிக்கப்படாமல் உள்ள அணையில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைத்து பல குளங்களையும் தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளனர். மேலும் பல வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி சீரமைத்துள்ளனர்.

கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் நிலத்தடி நீரை சேமிக்க எடுத்து வரும் முயற்சிகளை பொதுமக்கள் பாராட்டியதுடன் அடுத்தடுத்த கிராமங்களிலும் இளைஞர்கள் நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கும் முயற்சியிடும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் கொத்தமங்கலம் சிதம்பரவிடும் மீனாங்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி 100 நாள் வேலை செய்து பேரக்குழந்தைகளுக்காக சேர்த்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் பணத்தை நிலத்தடி நீரை பாதுகாக்க நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் வழங்கினார்.

மேலும் மூதாட்டி ராஜம்மாள் கூறும் போது.. 100 நாள் வேலை செய்து எனது செலவுகள் போக மீதி தொகையை பேரக்குழந்தைகளுக்காக சேர்த்து வைத்திருந்தேன். சில நாட்களாக இளைஞர்கள் சொந்த பணத்தில குளம், வரத்துவாரிகளை தூர்வாரி தண்ணீரை சேமிக்க முயற்சி செய்றாங்க என்பதை கேட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நாள்ல குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது என்ற நிலையில் தண்ணீரை பாதுகாக்க இளைஞர்கள் எடுக்கும் முயற்சியை பார்த்து என்னால் சும்மா இருக்க முடியல. ஆதனால தான் நான் சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை குளம், வரத்து வாய்க்கால் தூர்வார கொடுத்தேன். என்னைப் போல பலரும் கொடுப்பாங்க. இனி மழை பெய்தால் எங்க ஊர் குளங்கள்ல் தண்ணீர் நிரம்பும் என்றார் மகிழ்ச்சியாக.

இளைஞர்கள் கூறும் போது.. குளம், வரத்து வாரிகள் 40, 50 வருடங்களுக்கு பிறகு எந்த பராமரிப்பும் செய்யாமல் உள்ளது. அதனால் தான் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கவில்லை. அது பற்றி எங்களுக்கும் தெரியவில்லை. ஆனால் இப்போது ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை என்ற போது தான் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதை உணர்ந்தோம். மறுபடியும் நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என்றால் நீர்நிலைகளில் தண்ணீரை தேக்க வேண்டும். அதற்காக தான் அம்புலி ஆறு தொடங்கி குளங்கள் வரை தூவாரி சீரமைக்கிறோம்.

கிராமத்தில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது பணம் பற்றாக்குறை ஏற்பட்டு வேலை தடைபட்டு விடுமோ என்ற நிலையில் இன்ற ராஜம்மாள் பாட்டி வேலை நடக்கிற இடத்துக்கே வந்து ரூ. 10 ஆயிரம் கொடுத்திருக்கிறது எங்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது. அவங்களும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பம். அவங்களுக்கு நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பணம் கொடுத்திருக்காங்க. அதே போல கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பலரும் பொருளாதார உதவி செய்துள்ளதுடன் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களின் ஒத்துழைப்பும் உதவியும் உள்ளது என்றனர்.

puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe