
கரோனா காரணமாக தடைவிதிக்கப்பட்டிருந்த திருவிழாக்கள் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கி களைகட்டத் தொடங்கும்போது, தேர்தல் அறிவிப்பு வெளியானதால் கலை நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான திருவிழாக்களான, குளமங்கலம் பிரம்மாண்ட குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் மாசிமகம், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆகியவை பல்வேறு கட்டுப்பாடுகளோடு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 15 நாட்களுக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் களையிழந்து நடத்தப்பட்டது.
கடந்த வாரம் முளைப்பாரி, குதிரை எடுப்பு, கல் பொங்கல் என திருவழாக்கள் நடந்தாலும் நேற்று (10.03.2021) புதன்கிழமை நடந்த மது எடுப்புத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ விருந்து படைத்த கிராம மக்கள், மாலையில் குடத்தில் நெல் நிரப்பி தென்னம்பாளைகள் அலங்கரித்து ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித்திடலில் ஒன்றிணைந்து ஆட்டம் பாட்டத்துடன் ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மனை வழிபட்டுச் சென்றனர். ஒரு வருடத்திற்குப் பிறகு நடந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டதால் களைகட்டி இருந்தது.