Advertisment

ஓவிய ஆர்வம் எப்படி வந்தது..? மனம் திறக்கும் மாணவி..!

Advertisment

கரோனா தொற்று பரவத் தொடங்கியதுமுதல் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. கடந்த ஆண்டுமுதல் இதே நிலை நீடிக்கிறது. இந்த விடுமுறை நாட்களில் இணைய வழி கல்வியும் ஒருபக்கம் நடந்துவருகிறது. இப்படியான விடுமுறை நாட்களை மாணவர்களும்இளைஞர்களும் தங்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் சாதகமான சூழலாக கருதுகிறார்கள்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகள் நந்தினி, கரோனா விடுமுறை நாட்களில் தனது கை வண்ணத்தால் ஓவியங்களாக வரைந்து வீடு முழுவதும் வைத்திருக்கிறார். தனியார் கல்லூரியில் பயிலும் இவரது வண்ண வண்ண ஓவியங்களைக் காண அவரது தோழிகள் மட்டுமின்றி, ஓவியத்தின் மீது ஆவல் கொண்டவர்களும் வந்து பார்த்து ரசிக்கிறார்கள்.

இதுகுறித்து மாணவி நந்தினி நம்மிடம், “அப்பா (மகேந்திரன்) ஓவியம் நிறைய வரைவார். அவர் வரையும்போது அருகில் இருந்து பார்த்ததால் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. அதனால் சிறு குழந்தையாக இருக்கும்போதே பென்சில் ஓவியங்கள் வரைவேன். இப்படி பென்சிலில் வரைந்தஓவியங்களே 3 நோட்டுகளில் உள்ளன.

Advertisment

இப்ப கரோனா விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது கைவினைப் பொருட்களைச்செய்தேன். பெண்களுக்கான உடைகளை அழகாக வடிவமைப்பேன். தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தேன். எங்க அப்பா நான் தொடர்ந்து வரைவதைப் பார்த்து சார்ட் பேப்பர், பென்சில், பிரஷ், வாட்டர் கலர் எல்லாம் வாங்கித் தந்தாங்க. தினமும் 2, 3 படங்கள் வரைந்தேன். இப்ப வீடு முழுவதும் வண்ணப்படங்களாக உள்ளது. வீட்டில் அம்மா, அப்பா, சகோதரி ஒத்துழைப்பு கிடைப்பதால், இன்னும் நிறைய வரையணும் என்ற ஆசை உள்ளது. நான் வரைந்து வைத்துள்ளதைப் பார்க்க தினமும் பலர் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ஓவியங்கள் வரைவதால் மன நிம்மதி கிடைக்கிறது. கரோனா ஊரடங்கு முடிஞ்சதும் விரைவில் ஓவியக் கண்காட்சி நடத்த இருக்கிறேன்” என்றார்.

puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe