புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம் போல திங்கள் கிழமை மனுநீதி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மனு கொடுக்க வந்த சிலர், மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயலும் சில சம்பவங்கள் நடந்துவருகிறது.

Advertisment

அதனால் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சோதனைகள் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

PUTHUKOTTAI COLLECTOR OFFICE INCIDENT

இன்றும் அதே போல சோதனைகளுக்கு பிறகே ஆட்சியர் அலுவலகத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பள்ளி சீருடையுடன் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக நின்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர். இதைப் பார்த்து அப்பகுதியில் நின்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். போலிசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் அடித்தனர்.

Advertisment

பின்னர் தீக்குளிக்க முயற்சித்தது, கறம்பக்குடி பல்லவராயன்பத்தை ஆத்தியடிப்பட்டியை சேர்ந்த பாரதி மற்றும் குடும்பத்தினர் என தெரியவந்தது. கண்ணீரோடு கதறிக் கொண்டிருந்தவர்கள், எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கும் சிலர் மீது புகார் கொடுத்தோம், ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். எங்களை அப்பகுதியில் உள்ள சிலர் மிரட்டி வருவதால் ஊரைவிட்டு வெளியேறினோம். மேலும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.

எங்களுக்கு ஊருக்கு போனால் பாதுகாப்பு இல்லை. அதனால் தான் ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளையும் கையோடு கொண்டு வந்து ஆட்சியரிடம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தோம் என்றனர். பலத்த பாதுகாப்பையும் மீறி எப்படி மண்ணெண்ணெய் கொண்டு வந்தார்கள் என்பது பற்றி காவல் உயர்அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.