ADVERTISEMENT

காவல் நிலையத்திலிருந்து காணாமல் போகும் மாட்டு வண்டிகள்! திருடனை பிடித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்! 

11:01 AM Jun 30, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

காவல்நிலையத்தில் இருக்கும் மாட்டு வண்டி

ADVERTISEMENT

விபத்து, திருட்டு மணல், மண், கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு முடியும் வரை காவல் நிலையங்களில் நிறுத்தி பாதுகாப்பது வழக்கம். இப்படி பறிமுதல் செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் இருந்து பேட்டரி, டயர்கள், சிடி பிளேயர்கள் திருட்டு அதிகமாகவே இருக்கிறது. இதனால் வழக்கு முடிந்து வாகனங்களை எடுக்க வரும் வாகன உரிமையாளர்கள் கண்ணீரோடு செல்லும் நிலை இன்று வரை தொடர்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களே காணாமல் போவது தான் பேரதிர்ச்சி.

ஆலங்குடி டி.எஸ்.பி சரகத்திற்குட்பட்ட வடகாடு காவல் நிலையத்தில் பல வருடங்களாக பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் கிடக்கின்றன. இதில் கடந்த 21ம் தேதி நள்ளிரவு 1.50 மணிக்கு காவல் நிலைய வாசலில் கண்காணிப்பு கேமராவுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மாட்டு வண்டியை பக்கத்து கிராமமான கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பச்சை துண்டு போட்ட ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார்.

காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டி காணாமல் போனதுகூட தெரியாதது போல மொத்த போலீசாரும் மௌனம் காத்த நிலையில், 22ம் தேதி நாம் மாட்டு வண்டி பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற தகவலை வாட்ஸ் அப் பதிவு மூலம் மாவட்டக் காவல் உயர் அதிகாரிகள் வரை கொண்டு சென்றும்கூட மாலை வரை திருடுபோன மாட்டு வண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெயிண்ட் அகற்றப்பட்டு தோப்பில் நின்ற மாட்டு வண்டி

இந்த நிலையில் மாட்டு வண்டி திருடனும் காவல் நிலையத்திற்கே வந்து போலீசாரிடம் பேசிவிட்டு சென்றார். மாலையில் மாட்டு வண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை படத்துடன் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் காவல் துறைக்கு தெரியப்படுத்திய பிறகு, இரவு 9 மணிக்கு பிறகு ஆலங்குடி டி.எஸ்.பி சென்று காவல் நிலைய வாசலில் மாயமாகி, தென்னந்தோப்பில் நின்ற வண்டியை இழுத்து வந்தார். அத்தோடு நடவடிக்கை முடிந்தது.


காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டியை திருடிச் சென்றது குறித்து எந்த வழக்கும் இதுவரை பதிவாகவில்லை. இது குறித்து மேலும் விபரமறிந்த சிலர் கூறும் போது, “மாட்டு வண்டியை சம்பந்தப்பட்ட நபர் திருடிச் செல்லவில்லை. மணல் கடத்தலில் சிக்கியிருக்கும் மாட்டு வண்டிகளை மாதம் 2, 3 வண்டிகளை காவல் நிலையத்திலிருந்து சிலர் குறைந்த விலைக்கு விற்று அந்த நபர் இரவில் இழுத்துச் செல்கிறார். காவல் அதிகாரிக்கு பல நாள் கார் ஓட்டுவதும் இந்த நபர் தான். அதனால் தான் எந்த நடவடிக்கையும் இல்லை. துரிதமாக விசாரணை செய்தால் இதுவரை விற்கப்பட்ட வண்டிகள் எத்தனை யார் விற்பது என்பது தெரியவரும். காவல் துறையினரே சிக்குவார்கள் என்பதால் தான் நடவடிக்கை இல்லை.


காவல் நிலையத்திலிருந்து திருடிச் செல்லும் வண்டிகளுக்கு பழைய பெயிண்டை தேய்த்து அகற்றிவிட்டு புது பெயிண்ட் அடிச்சு ரூ.10 ஆயிரம் வரை விற்கிறார்கள். போனவாரம் திருடப்பட்ட வண்டியிலும் கூட வண்டியில் எழுதியிருந்த பெயர்கள், அதில் இருந்த ஒரு கட்சியினுடைய சின்னம் அழிக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். காவல் நிலையத்திலேயே திருட்டு நடப்பதை கூட கண்டு கொள்ளாத போலீசார் எப்படி பொதுமக்களின் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு. இப்ப மற்ற வண்டிகள் திருடு போகாமல் இருக்க டயர்களில் காற்றை பிடிங்கி இருக்கிறார்கள்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT