புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள நாகுடி பகுதி சேர்ந்தவர் அசோகன் (35), அவரது மனைவி தேவிபாலா(26), குழந்தைகள் யுகேஷ் (6), யுதர்சனா (4) ஆகியோருடன் வாழ்ந்துவந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அசோகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். வழக்கு பதிவு, பிரேதப்பரிசோதனை எல்லாம் முடிந்து அசோகன் உடலை உறவினர்களிடம் கொடுத்தனர் போலிசார். இந்த துயரிலிருந்து மீளமுடியாத அந்த குடும்பம் விபத்து இழப்பீடு, காப்பீட்டு இழப்பீடுகள் கிடைத்தால் குழந்தைகளையாவது படிக்க வைக்கலாம் என்று அதற்காக முயன்றுள்ளனர். தேவிபாலா மற்றும் உறவினர்கள் அதற்கான சான்றுகள் பெற காவல் நிலையம் முதல் தாலுகா அலுவலகம் வரை அலைந்து வருகின்றனர்.
காலம் பல கடந்தும் உதவிக்கு வழியில்லை என்ற நிலையில் தேவிபாலா ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது 2 குழந்தைகளுக்கும் 20 தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்துவிட்டு தானும் தூக்கமாத்திரை கலந்த பாலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மூவரும் மயங்கி கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து 2 குழந்தைகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவிபாலாவும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.