Skip to main content

தாமிரவருணியில் மகா புஷ்கரம்! நதியும் நதிக்கரையும் பாழாகும் என தமிழ் அன்பர்கள் வேதனை..!

Published on 10/08/2018 | Edited on 27/08/2018
Thamirabarani


தமிழ் நதி என்ற பெருமை கொண்ட தாமிரவருணி மகா புஷ்கரம் வரும் அக்டோபர் 11ல் தொடங்கி 22ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நதியும் நதிக்கரையும் மாசுபடும், பழாகும் என்பதால் தாமிரவருணி புஷ்கர விழாவினை ஏதேனும் ஒரு மடத்தில் வைத்து மடாதிபதிகளுடன் இணைந்து ஒரு நாள் விழாவாக அரசு நடத்தி முடிக்க வேண்டுமென தமிழ் அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வரலாற்று ஆய்வாளர் இளசை மணியனோ, " அக்டோபர் 11 முதல் 22ம் தேதி வரை தாமிரபரணி நதிக்கரை தீரத்தில் புஷ்கர விழா நடைபெறுகிறது. இந்த நாள்களில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள 149 தீர்த்த கட்டங்களில் படித்துறை பூஜை, ஆரத்தி பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புஷ்கர விழாவில் பங்கேற்ற தாமிரவருணி நதியில் நீராடி வழிபடுவார்கள் என மடாதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். அது குறித்து தினசரி ஆலோசணை கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுவாக புஷ்கரம் என்பது மனிதர்களுக்கு ராகு கேது மாற்றங்களினால் ராசிநாதன் அந்த மக்களுக்கு அது பிரவேசிக்க கூடியதை அறிமுகப்படுத்தக்கூடிய இனம் காட்டக்கூடிய நிகழ்வாக நடைபெற்று வருவது வழக்கம். ஆனால் திடீரென தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிகழ்வு நடைபெறுவதாக மடாதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனுடைய மர்மம் என்னவென்று தெரியவில்லை.
 

Thamirabarani
                 இளசை மணியன்


ஆனால் தாமிரவருணிக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. அதாவது தமிழகத்திலேயே நெல்லை சீமையில் தீர்த்தம் தோன்றி தென் பகுதியிலேயே கடலில் சென்று சேரக்கூடிய சிறப்புகுரிய நதியாகும் தாமிரவருணி. அந்த தாமிரவருணி நதியை இந்த 10 நாள்களில் புழுதிகாடாக ஆக்குவதற்கு மடாதிபதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த புண்ணிய தீர்த்தத்தின் புனித நீரை நாங்கள் நீராடுகிறோம். படிக்கட்டுகளில் இருந்து பூஜிக்கிறோம் என்று புஷ்கர விழா என்ற பெயரில் நதியை இயற்கைக்கு விரோதமாக அசுத்தப்படுத்துகிறார்கள். மாசுப்படுத்துகிறார்கள். தென் தமிழ்நாட்டு பூமியை குளிர வைக்ககூடிய தாமிரபரணி தாய்க்கு நேரிட்டிருக்கிற அவலத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு மாற்றாக தாமிரபரணி நீரை பாபநாசத்திலிருந்து அது சங்கமாகும் புன்னக்காயல் கடல் வரை ஆங்காங்கே இருக்ககூடிய விவசாயிகள் பொதுமக்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் இவர்கள் எல்லாம் இந்த புண்ணிய நதியின் ஆளுமையை சிறப்பை புகழை எடுத்து கூறி அதை தூர் வாருவதற்கு சுத்தப்படுத்துவதற்கு மாசில்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதுவே நாம் புஷ்கர விழா நடத்துவதை போல் ஆயிரம் மடங்கு உயர்வானது. இந்த மடாதிபதிகள் எங்கு இருக்கிறார்களோ அவர்களது தர்மசாலைகளில் புஷ்கர விழாவை நடத்தி கொள்ளலாம். அதற்காக நதியை பலிகடா ஆக்க வேண்டாம் என்பது தான் பணிவான வேண்டுகோள்.

நட்சத்திரங்கள் மாறுவதை இந்த நட்சத்திரங்கள் என்ன காரணத்துக்காக மாறுகிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அந்தந்த மடாலயங்களில் நடத்தி கொள்ளலாம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். எதிர்ப்பும் இருக்காது. ஆனால் நதியை கலங்கப்படுத்த வேண்டாம். மாசுபடுத்த வேண்டும். தண்ணீரை கலங்கப்படுத்த வேண்டாம் . இந்த தாமிரபரணி ஆற்றில் கங்கைகொண்டான் பகுதியில் தான் வெளிநாட்டுகாரன் தன்னுடைய கம்பெனி மூலம் நதி நீரை உறிஞ்சி எடுத்து கோகோ கோலோ போன்ற குளிர்பானங்கள் தயாரிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்துகிறானே அதைபற்றி இந்த மடாதிபதிகள் என்ன நினைக்கிறார்கள். இந்த தண்ணீரை இன்னொருவன் விலைக்கு விற்கிறானே ஆனால் இந்த தண்ணீர் புனித நீர் என்று கண்களை திரை போட்டு மறைக்கிறார்களே இதில் என்ன அர்த்தமிருக்கிறது.
 

 

 

அரசு புஷ்கர விழா அந்த மடாதிபதிகளிடம் தெளிவாக அந்த தேதி நாள் நட்சத்திரத்தின் நேரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு அந்த சமயத்தில் இந்த மாடாதிபதிகளை மையமாக கொண்டு அந்த புஷ்கர விழாவை ஏதாவது சிறந்த மடத்தில் வைத்து அந்த நிகழ்வை நடத்தி ஒரு நாளில் முடித்து விடலாம். அது பக்தர்களின் மனதையும் புண்படுத்தாது. அந்த செய்கை மடாதிபதிகளின் மனதையும் புண்படுத்தாது. ஆக இந்த அரசாங்கம் மடத்துக்கு விரோதமாக கடவுள் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டும் வராது. அதற்கு மாறாக 10 தினங்களும் அந்த புண்ணிய தீர்த்தத்தில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குளித்து நீராடி செல்வதானால் அந்த நதியின் நிலைமை என்னவென்பதை நடைபெறுவதால் கற்பணை செய்து கூட பார்க்க முடியாது.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் தீர்த்தமாடுவது என்பது 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை. நீராடிவிட்டு மக்கள் சென்றுவிடுகிறார்கள். அதற்கான குளம் அது. தாமிரபணி அப்படியல்ல. குடிநீர், வேளாண்மைக்கு உண்டான தண்ணீர் இது தவிர பானங்கள் தயாரிக்க உற்பத்தியாக கூடிய தண்ணீர் என பல்துறை முனையில் இதனுடைய உபயோகம் பயன்பாடு உள்ளது. அதனால் தான் நதி தீரத்தில் புஷ்கர விழாவை நடத்த வேண்டாம் என திட்டவட்டமாக வலியுறுத்துகிறோம். மகாமக குளத்தில் மாசுகளை தடுத்து நிறுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான அனுகுமுறைகள் இன்றைக்கு உள்ளது. ஆனால் தாமிரபரணி நதிக்கரையில் அது இல்லை. புன்னைக்காயல்வரை எல்லா விதமான அசுத்தங்களும் செல்லும். தடுத்து நிறுத்துவார் யாரும் கிடையாது. அவரவர் புஷ்கர விழாவினை நடத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்." என்கிற அவர் இதனையே கோரிக்கையாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆந்திர அரசின் முடிவுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Minister Duraimurugan strongly condemns Andhra govt decision

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியுள்ளதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டு மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். கடந்த 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் ஆற்றுப் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று  உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு தீர்ப்பு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேசபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயற்சித்தபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இரு மாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இம்மாதிரியான எந்தவித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது என இரு மாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

பாலாற்றில் தடுப்பணை; நிதி ஒதுக்கீடு செய்த ஆந்திர அரசு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Barrage in Balaru river Govnt of Andhra Pradesh has allocated funds

பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள சாந்திபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (26.02.224) குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதே சமயம் பாலாற்றில் ஆந்திர அரசு சார்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்குத் தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.