
அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் மதுரை புறநகர் கிழக்கு அதிமுகவின் சார்பாக தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை திருப்பரங்குன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள் மேடையில் இருக்கும்போதே இதில் நிகழ்ச்சியின் இறுதியில் பூத் நிர்வாகிகள் மாறி மாறி தாக்கிக் கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மதுரை மாநகர எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணித் தலைவர் ரமேசை ஒரு சிலர் மேடையில் இருந்து தள்ளி விட்டதாக இரு தரப்பு நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. காலையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் இதேபோன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை, கும்பகோணத்தை அடுத்து மதுரையிலும் அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.