Advertisment

பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

mansour

Advertisment

எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.

சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வ-ழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

Advertisment

நடிகர் மன்சூர் அலிகானை கடந்த மே 3ம் தேதியன்று சேலத்திற்கு அழைத்து வந்த அவர், எட்டு வழிச்சாலைத் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிராக மக்களிடம் பரப்புரை செய்ய வைத்தார். அப்போது பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ''எட்டு வழிச்சாலைக்காக எட்டு பேரை கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து கடந்த 17ம் தேதி காலை சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மன்சூர் அலிகானை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். கலகம் விளைவித்தல், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், 7 (1) சிஎல்ஏ ஆக்ட் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த பியூஷ் மானுஷை, கடந்த 18ம் தேதி இரவு ஓமலூர் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் கேட்டு ஓமலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார்.

மேலும், பியூஷ் மானுஷை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்வதாக தீர்ப்பு அளித்தார். தினமும் காலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து பியூஷ் மானுஷ் விடுதலை ஆகி வெளியே வந்தார். அவருடைய மனைவி, பெற்றோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது பியூஷ் மானுஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. மக்களை எந்த வகையிலும் வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையில் ஒருபோதும் செயல்படவில்லை.

விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை அமையும் பகுதி மக்கள் பயந்து போய் உள்ளனர். பொதுமக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தவறான நடவடிக்கை ஆகும். அரசிடம் விளக்கம் கேட்பவர்களை அரசு அச்சுறுத்தி வருகிறது. மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுவேன்,'' என்றார்.

mansur ali khan push manush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe