The purpose of government is to protect the affected people Minister Udayanidhi Stalin

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதே சமயம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை விருதுநகரில் சந்தித்து, அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது விருதுநகர் மாவட்டத்திலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட கேட்டுக்கொண்டார்.

நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அங்குள்ள பெல் உயர் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனையடுத்து நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Advertisment

The purpose of government is to protect the affected people Minister Udayanidhi Stalin

இதனைத் தொடர்ந்து, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, “மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பதே அரசின் முக்கியமான நோக்கம். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். தண்ணீர் வடிந்த பின் பயிர் பாதிப்புகளைக் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ள பாதிப்பால் நெல்லையில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.