Skip to main content

ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல்! -தமிழக அரசு விளக்கம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
Purchase of paddy directly from farmers during curfew! Tamilnadu Government Explanation!

 

ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்க முடியாத நிலையில், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதில், ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலைத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  10,100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.  உழவர் சந்தைகள் மூலம் 1,400  மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன.

சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன. காய்கறிகளைப் பாதுகாப்பதற்கு,  குளிர்பதன கிடங்குகளுக்கான வாடகை மே 31 வரை  விலக்களிக்கப்பட்டுள்ளது.  

காய்கறி, பழங்களைப் பதப்படுத்தவும், வினியோகம் செய்யவும், 482 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் உணவுச் சங்கிலி மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு தள்ளிவைத்துள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.