ADVERTISEMENT

புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டிக் கொலை! 

12:32 PM Nov 30, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியில் சமத்துவபுரம் ஒன்று அமைந்துள்ளது. இதன் நுழைவு வாயில் முன்பு அதே ஊரைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக் என்பவர் நேற்று இரவு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி உள்ளிட்ட கத்திகளைக் கொண்டு அசோக்கை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அசோக் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்தச் சம்பவத்தின்போது அங்கு கடை வைத்து நடத்தி வரும் கலையரசன் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரின் கையிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது.

இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த அப்பகுதி மக்களும், அசோக்கின் மனைவி மற்றும் அவரது உறவினர்களும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அசோக் உடலைக் கைப்பற்ற முயன்றனர். அப்போது அந்தப் பகுதி மக்களும், அசோக்கின் உறவினர்களும் இணைந்து கொலை செய்த நபர்களை கைது செய்த பிறகே உடலை இங்கிருந்து எடுக்க அனுமதிப்போம் என வாதிட்டனர். தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் சமாதானம் அடைந்தனர். பிறகு உடலைக் கைப்பற்றிய போலீஸார், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அசோக் கொலைக்கு முன்பகை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். தற்போது முதற்கட்ட விசாரணையில், அசோக்கை கொலை செய்த மூவரும் அவர் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து கஞ்சா கடத்தல் விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அது தொடர்பாக அசோக் போலீஸில் அவ்வப்பொழுது புகார் கொடுப்பதும் நடந்துள்ளது. எனவே அதன் காரணமாகக் கூட இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தப்பியோடிய மூவரும் கைது செய்யப்பட்ட பிறகே அசோக் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT