/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_321.jpg)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தினர்.
திருவாரூரில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி, “புறாவுக்காக தன் தொடை சதையை அறுத்துக்கொடுத்து நீதியை நிலைநாட்டிய சோழமன்னர் சிபிஆண்ட திருவாரூரில், இன்று மத்திய அரசிடம் நீதி கேட்டு நிற்கிறோம்.
விவசாயிகளை அலட்சியப்படுத்துபவர்கள் எந்த நாட்டிலும் வென்றதில்லை என்பதுதான் வரலாறு. இன்று நம் விவசாயிகள் டெல்லியில் போராடுவதை நாடே உற்று கவனிக்கிறது.
உலகப் பத்திரிகைகள் முதல்பக்க செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் நம் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்திரிக்கிறார். இந்தியா ஐ.நா.வில் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாம், வழியெங்கும் நகரில் நடந்து வந்தோம். வீதிகளில், கடைகளில் நின்றவர்கள், கட்டடங்களில் நின்றவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இரக்கம் சொட்ட நம் கோரிக்கையைக் கவனிப்பதை உணரமுடிந்தது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் உட்பட பலரும் விவசாயிகளின் போராட்டத்தை கவலை ததும்ப பார்க்கின்றனர். விவசாயிகளை இளக்காரமாகப் பார்க்கக் கூடாது. ஆட்சியில் உள்ள சிலர் அப்படி பார்க்கிறார்கள். அவர்கள் நம் வாழ்வுக்காக, உணவுக்காக, மண்ணுக்காகப் போராடுகிறார்கள்.
அவர்கள் ஆயுதப் புரட்சி செய்ய மாட்டார்கள். பசுமைப் புரட்சியை செய்வார்கள். அவர்களது டிராக்டர்கள்தான் அவர்களது பீரங்கிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.
விலை உயர்ந்த கார்கள் செல்லும் டெல்லி வீதிகளில், இன்று விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் ஒத்திகை பார்க்கிறார்கள். தங்கள் விவசாய இழப்புகளை, வருமான இழப்பை பற்றி கவலைப்படாமல் 6 மாதங்களுக்கான உணவுகளோடு வந்து இறங்கிவிட்டார்கள்.
பஞ்சாபிகள் தொடங்கி வைத்த போராட்டம், இங்கு தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது. பஞ்சாபிகள், வங்காளிகள், தமிழர்கள் ஆகியோரின் போராட்டங்கள் தோற்றதில்லை. இதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
மத்திய அரசு உண்மையிலேயே விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பாக்க வேண்டும் எனில், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்களின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஆனால் அம்பானி, அதானி போன்றவர்களுக்காக விவசாயிகள் விரும்பாத புதிய சட்டங்களைத் திணிக்கிறார்கள்.
விவசாயிகள் அவர்களுக்கு முக்கியமானவர்களாக தெரியவில்லை. எனவே நாம் விவசாயிகளின் நலனுக்காக நடக்கும் போராட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும்.எல்லா விவசாய சங்கங்களும் இணைந்து போராட வேண்டிய காலம் கனிந்து வருகிறது. விவசாயிகளின் உரிமைக்காக, நீதிக்காக களமிறங்கி போராடுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)