Nirmala Devi jailed for 10 years

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

Advertisment

இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியைக் குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று நிர்மலாதேவிக்கான தண்டனை அறிவிக்கப்பட இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நிர்மலா தேவி தரப்பு நீதிமன்றத்தில் கோரிய நிலையில் தற்போது அவருக்கான தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. தீர்ப்பின்படி நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2,42,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு நிர்மலா தேவி அழைத்து செல்லப்படஇருக்கிறார்.