பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை நிரந்தரமாகதிறப்பது தொடர்பான 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தை செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக, தமிழக மீன் வளத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பழவேற்காடு ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதிகளைத் தூர்வார, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, திருவள்ளுர் மாவட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழக மீன்வளத்துறை சார்பில், அதன் இயக்குநர் சமீரன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 760 சதுர கிலோ மீட்டருக்குபரந்துள்ள பழவேற்காடு ஏரியையும், வங்ககடலையும் இணைக்கும் முகத்துவாரம், காற்றின் திசை மாறுபாடு காரணமாக மணல் திட்டுகளால் மூடி விடுகிறது.
முகத்துவாரம் மூடுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முகத்துவாரத்தை நிரந்தரமாகதிறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தை செயல்படுத்த கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள போதிலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20- ஆம் தேதி, சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புலிகேட் ஏரியின் முகத்துவாரத்தை நிரந்தரமாகதிறப்பது பற்றிய திட்டத்தை அறிவித்த போதும், கரோனா பரவல் காரணமாக, திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.
தற்காலிகமாக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் எரியின் முகத்துவாரம் திறக்கப்பட்ட போதும், மீண்டும் அது மூடிக்கொண்டதாகவும், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை நிரந்தரமாகதிறக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைகாக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.