
அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜூன் 14ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
பெங்களூரு புகழேந்தியை நீக்கி வெளியிட்ட கூட்டறிக்கையில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
தன்னை நீக்கிய உத்தரவில் தன்னை பற்றிய கருத்துக்கள் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஆஜராகி விளக்கமளிக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.