Skip to main content

மான்கள் வேட்டையில் சிக்கிய போலீஸ்காரர், துணை பிடிஒ... 5 பேர் கைது!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

புதுக்கோட்டையில் மான்கள், காட்டு விலங்குகளை வேட்டையாடி, அந்த மாமிசங்களை விற்று வந்த போலீஸ்காரர் மற்றும் துணை வட்டாட்சியர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர். 3 பேரை விசாரணைக்குள் வைத்துள்ளனர். ஒரு உதவி ஆய்வாளர் தப்பித்து ஓட்டம்.
 

pudukottai

 

 

புதுக்கோட்டை நகரில் வியாழக்கிழமை காலை ஒரு பொலிரோ காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்தார். காரில் வந்தவர்கள், குரல் உயர்த்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் போலீஸாருக்கு சிலர் தகவல் சொல்ல, அங்கு வந்த திருக்கோகர்ணம் போலீஸார் காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்து நடந்ததும் காரில் இருந்த ஒருவர், அதிலிருந்து இறங்கி மறைந்துவிட்டார்.

காரை காவல் நிலையத்தில் நிறுத்திய பிறகு, கார் பின் சீட்டில் ரத்தக்கரை இருப்பதை அறிந்த போலீஸ் மேலும் சோதனையிட்டதில் துப்பாக்கி குண்டுகள் சில காரில் கிடைத்திருக்கிறது. அதுகுறித்து போலீஸார் விசாரிக்க, முயல் வேட்டைக்கு சென்று திரும்பியதாக முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளனர். அந்நேரத்தில் மாவட்ட எஸ் பி அருண்சக்திக்குமார்,  ‘வேட்டை, ஆயுதம் என்று பல வகையிலும் தொடர்பு உள்ளவர்களாக இவர்கள் மீது தகவல் வருகிறது, விசாரனையை வேகப்படுத்துங்கள்’ என்று சொல்ல, அதன்பின் விசாரனையின் போக்கு மாறியது.

காரில் இருந்த ராபின்சன் என்ற நபரை நெருக்கி விசாரிக்க கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை சொல்லத் தொடங்கினார். மான் வேட்டையாடி புதுக்கோட்டை நகரில் விற்றதையும் ஒத்துக் கொண்டு பல பெயர்களையும் சொல்ல அவர்களையும் விசாரனைக்கு கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரனையில் ராபிம்சன், டிரைவர் ராமன், போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருவப்பூர் ராஜேஷ், திருவப்பூர் சுரேஷ், பாசிப்பட்டி வெங்கடாசலபதி, கீரனூர் எழில் நகர் சாமுவேல் பிரின்ஸ் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், ராபின்சன், ராமன், ராஜேஷ், வெங்கடாசலபதி, சாமுவேல்பிரின்ஸ் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனார்கள். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.

விபத்து நடந்த காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களிடம் தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் ராபின்சன் மான் வேட்டை மட்டுமின்றி துப்பாக்கி வாங்கி விற்பனை செய்து வந்ததும், மேலும் போலீஸிடம் சிக்காமல் இருக்க மான் வேட்டையாடி அதிகாரிகளுக்கு மான் கறி சப்ளை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
 

pudukottai

 

 

இந்த சம்பவத்தில் நகரில் உள்ள ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தொடர்ந்து சம்மந்தப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரனைக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது. இந்த விசாரனையில் இருந்து தப்பிக்க மாண்புமிகு பெயரை பயன்படுத்தி வருகிறாராம் அந்த உதவி ஆய்வாளர். இவர் தான் மாவட்டம் முழுவதும் தனது உறவினரை வைத்து கள்ள லாட்டரியும் விற்பனை செய்கிறாராம். 

மேலும் விசாரனையில் பல முக்கிய புள்ளிகளும் சிக்கலாம் என்கிறார்கள் நகரவாசிகள். 

 

 

சார்ந்த செய்திகள்