/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kiramangalam-ps-art.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் என்ற இடத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து முகத்தை மூடிக்கொண்டு உள்ளே இருவர் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்து முகத்தைக் காட்டி கிண்டலாகச் சிரித்துள்ளார். மற்றொருவர் கருவறையைப் பார்த்து, ஆத்தா நாங்க உங்க உண்டியலை திருடப் போறோம் காப்பாத்து என்பதுபோல தலைக்கு மேலே கைகளைத்தூக்கி கும்பிட்டுள்ளார். இதையடுத்து 3 அடி உயரமுள்ள எவர்சில்வர் உண்டியலை பின்பக்கமாக தூக்கிச் சென்று கட்டரால் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை பையில் கொட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர். மறைவாக வந்து கேமராவை உடைத்து தூக்கி வீசிவிட்டு உடைத்த உண்டியலை கொண்டு வந்து வைத்துவிட்டனர். அதன் பின்னர் இரும்பு உண்டியலில் தொங்கிய பூட்டை கட்டரால் உடைத்துவிட்டு லாக்கரை உடைக்க முயன்றபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்து ஆட்கள் ஓடி வர அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு 2 பைக்குகளில் ஏறி 4 பேர் தப்பிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் இதுபோல பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் எந்த இடத்திலும் திருடர்கள் முகம் தெரியாததால் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். ஆனால் கீரமங்கலம் உண்டியல் திருட்டு சம்பவத்தில், உண்டியல் திருடர்களில் ஒருவர் நன்றாகப் பதிவாகி இருந்ததுசெய்திகளில் வெளியானது. இந்த ஒருவரது முகத்தைப் பார்த்த இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களான இளைஞர்கள் இந்த முகத்தை எங்கோ பார்த்தது போல இருந்ததால் அவர்கள் இன்ஸ்டாகிராமில் தேடியதில் முகம் காட்டி சிரித்த நபரின் படம் இன்ஸ்டாகிராமில் காணப்பட்டதை எடுத்து கீரமங்கலம் போலீசாருக்கு படங்களுடன் முகவரி, அடையாளங்களையும் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து படங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் தனிப்படை போலீசார் உதவியுடன், அறந்தாங்கி வட்டம் பரவக்கோட்டை கிராமத்திற்குச் சென்று உண்டியலை தூக்கிச் சென்ற நபர்களில் ஒருவரான கருப்பு வேட்டி அணிந்து கருப்பு துண்டால் முகத்தை மறைத்திருந்தநடராஜன் மகன் முத்து (வயது 19) என்பவரைக் கைது செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் முகம் காட்டி சிரித்த 17 சிறுவன் மற்றும் 17 வயது 12 வகுப்பு பயிலும்பள்ளி மாணவர் ஒருவர் என இரு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், பூட்டுகள் உடைக்கும் கட்டர், செல்போன்கள், ரூ.4100 பணம் உள்பட பல பொருட்களையும் கைப்பற்றினர்.
மேலும், உண்டியல்களை உடைக்க மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாகி உள்ள மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ஆசை சௌந்தர் (வயது 19) மற்றும் அவர்களின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருட வந்தவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி படங்கள் பதிவிடும் பழக்கத்தில் உள்ளவர்களாக இருப்பதால் ஏராளமான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். உண்டியல் திருடப்பட்ட கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் எடுத்த படங்களும் பதிவிட்டுள்ளனர். இந்த படங்களே இவர்களை விரைந்து சிக்க வைத்துவிட்டது. இன்ஸ்டாகிராம் படங்களும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது பதிவான சிசிடிவி படங்களையும் வைத்தே இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)