
கடந்த ஒருமாதமாக தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. அடுத்தடுத்த மழைக்கு உடைப்பு ஏற்படும் நிலை உள்ளதால் தேக்கிய தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்திலும் வரத்து வாரிகள் நன்றாக இருந்த நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மிகப்பெரிய ஏரியான கவிநாடு கண்மாய் ஏரி 15 வருடங்களுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. ஆனால், திருவரங்குளம், அரிமளம் ஒன்றியங்களில் பல ஏரிகள் இன்றளவும் வறண்டு கிடக்கிறது. காரணம் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்.
இந்த நிலையில், திங்கள்கிழமை (15.11.2021) மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆலங்குடி சாலையில் உள்ள சில கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகமாகி குடியிருப்புகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. புலிக்குண்டு குளம் தண்ணீர் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு, அதன் பாசனப் பகுதியில் உருவாகியுள்ள குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

குடியிருப்புகளை மழைத்தண்ணீர் சூழ்ந்துள்ள தகவல் அறிந்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வுசெய்து தற்காலிக நிவாரணம் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மழைத்தண்ணீர் வருவதை தடுப்பதால் இப்படி பேராபத்துகளை மக்கள் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஆங்காங்கே வாரிகளை ஆக்கிரமித்து சிறிய தூம்புகள் அமைத்திருப்பதை உடனே அகற்றவில்லை என்றால், மேலும் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்.