Skip to main content

'மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை...' -நீதிமன்றத்தில் மனுதாரர் தகவல்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 pudukottai fisherman issue upadate

 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் அவரது உடலில் காயங்கள் இல்லை என  உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

 

இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 

அதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கப்பல் இடித்து மீனவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்கிரணின் உடல் முதல் உடற்கூறாய்வுக்கு பிறகு தைக்கப்படாமலும், உடை அணிவிக்கப்படாமலும் இருந்தது என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், அதற்கான நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.