ADVERTISEMENT

கரையில் காத்திருக்கும் சொந்தங்கள்... உடலைப் பெற மீண்டும் சர்வதேச எல்லைக்குச் சென்ற மீனவர்கள்!

07:31 AM Oct 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 17ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், 18ஆம் தேதி அதிகாலை ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோர் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகிலிருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த கடற்படையினர், காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர்.

ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போனது. அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலைத் திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (21.10.2021) ராஜ்கிரண் உடல் மீட்கப்பட்டதாகப் படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்..

ராஜ்கிரணின் உடலும் கைது செய்யப்பட்ட மீனவர்களும் கரைக்கு வரும்வரை போராட்டம் தொடரும் என்றும் மீனவர்களின் போராட்டக்குழு அறிவித்திருந்தது. நேற்று அதிகாலை ராஜ்கிரண் உடலை வாங்க 2 படகுகளில் கடலுக்குள் செல்ல மீனவர்கள் தயாராக இருந்த நிலையில், திடீரென ‘ராஜ்கிரண் உடலை வாங்க இப்போது வர வேண்டாம், அடுத்த தகவல் வந்த பிறகு வரலாம்’ என்று கூறியுள்ளனர். இதனால் நேற்றும் உடல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், மீனவர் ராஜ்கிரணின் உடல் இன்று ஒப்படைக்கப்பட இருக்கிறது. இலங்கை கடற்படை முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்தியக் கடலோர கடற்படையிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெற கோட்டைப்பட்டினத்திலிருந்து மீனவர்கள் சென்றுள்ளனர். இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்களும், இரண்டு அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்றுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை உடலைப் பெறுவதற்காக மீனவர்களும் அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்று உடலை வாங்க முடியாமல் திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT